அறங்காவலர் குழு தலைவர் செந்தாமரைக்கண்ணனிடம் குன்றத்தூர் முருகன் கோயிலுக்கு தங்க சேவல் கொடியை காணிக்கையாக அளித்த விவேகானந்தன் மற்றும் அவரது குடும்பத்தினர். 
தமிழகம்

குன்றத்தூர் முருகன் கோயிலுக்கு காணிக்கையாக ரூ.65 லட்சத்தில் 1.5 கிலோ எடையுள்ள தங்க சேவல் கொடி வழங்கிய பக்தர்

செய்திப்பிரிவு

குன்றத்தூர்; குன்றத்தூர் முருகன் கோயிலுக்கு ரூ. 65 லட்சம் மதிப்பள்ள 1.5 கிலோ எடையுள்ள தங்க சேவல் கொடியை பக்தர் ஒருவர் நேற்று காணிக்கையாக வழங்கினார்.

குன்றத்தூரில் மிகவும் பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. இங்கு சென்னை மட்டுமின்றி தினமும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் குன்றத்தூரை சேர்ந்தவர் விவேகானந்தன். மருத்துவ அறுவை சிகிச்சைக்கான உபகரணங்கள் தயார் செய்யும் சிறு நிறுவனம் நடத்தி வருகிறார். தீவிர முருக பக்தரான இவர், தனது வேண்டுதலுக்காக குன்றத்தூர் முருகன் கோயிலில் தினமும் வந்து சாமி தரிசனம் செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார். அப்போது தனது வேண்டுதல் நிறைவேறினால் தங்கத்தால் சேவல் கொடி செய்து செலுத்துவதாக வேண்டியிருந்தார்.

இந்நிலையில் அவரது வேண்டுதல் நிறைவேறியதாகவும் இதையடுத்து வேண்டிதல்படி தங்க சேவல் கொடியை காணிக்கையாக அளிப்பது என்றும் முடிவு செய்தார். இதன்படி ரூ.64 லட்சம் மதிப்பில் 1 கிலோ 400 கிராம் எடை கொண்ட தங்கத்தினால் ஆன 3 அடி உயரம் கொண்ட தங்க சேவல் கொடியை காணிக்கையை நேற்று வழங்கினார்.

இதற்காக தனது குடும்பத்தாருடன் நேற்று கோயிலுக்கு வந்த அவரிடம் இருந்து கோயில் அறங்காவலர் குழு தலைவர் செந்தாமரைக்கண்ணன் பெற்று கொண்டார். தற்போது காணிக்கையாக வழங்கப்பட்ட இந்த தங்க சேவல் கொடியை தினமும் முருகன் சன்னதியில் வைத்து பூஜை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT