சென்னை: மணிப்பூரில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம், உலக அரங்கில் இந்தியாவுக்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
மணிப்பூர் வன்முறைச் சம்பவங்களைக் கண்டித்து, நாம் தமிழர்கட்சி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை வகித்தார். மகளிர்பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்கள் அமுதா நம்பி, சீதாலட்சுமி, மாநிலச் செயலாளர் பிரகலாதா முன்னிலை வகித்தனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் சீமான் கூறியதாவது: மணிப்பூரில் பழங்குடியினப் பெண்கள் இருவரை ஆடையின்றி சாலையில்இழுத்துச் சென்று, பாலியல்வன்கொடுமைக்கு உள்ளாக்கிஉள்ளனர்.
அங்குள்ள குக்கி பழங்குடியன மக்களுக்கு எதிரான வன்முறைச்சம்பவங்கள் தொடர்ந்து நடத்தப்படுகின்றன. இது உலக அரங்கில் இந்தியாவுக்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. மலைப் பகுதிகளில் உள்ள வளங்களைக் கொள்ளையடிப்பதற்காகவே, இதுபோன்ற பல்வேறு சம்பவங்களை நிகழ்த்துகின்றனர். மணிப்பூர் கலவரத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும்.
நெய்வேலி நிலக்கரி சுரங்க விரிவாக்கத்துக்காக, தமிழகத்தில் விளைநிலங்களை அழித்து வருகிறது என்எல்சி நிறுவனம். விவசாய நிலத்தைப் பாழ்படுத்தி, மின்சாரம் தயாரித்து, அதை விவசாயிகளுக்கு வழங்குவதில் என்ன பயன்? எனவே, சுரங்க விரிவாக்கத் திட்டத்தை உடனடியாக கைவிட்டு, விளை நிலங்களை மீண்டும் விவசாயிகளிடமே ஒப்படைக்க வேண்டும்.
வேல் யாத்திரையால், சட்டப்பேரவையில் பாஜகவுக்கு இடம் கிடைக்கவில்லை. அதிமுகவுடன் கூட்டணி வைத்ததால்தான், பாஜகவுக்கு 4 தொகுதிகள் கிடைத்தன. ஏதாவது கோயிலுக்கு வேண்டிக்கொண்டு பாத யாத்திரை சென்றால், புண்ணியமாவது கிடைக்கும். அண்ணாமலையின் யாத்திரையால் என்ன நடக்கப் போகிறது? இந்த பாதயாத்திரைமக்களுக்கு எந்தப் பலனையும் கொடுக்கப் போவதில்லை. இவ்வாறு சீமான் கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில், நாம் தமிழர்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் ராஜேந்திரன், சிவகுமார், தமிழ் தேசியக் கூட்டமைப்பு நிர்வாகிகள் வியனரசு, சாம் ஏசுதாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.