ஈரோடு: ஈரோட்டில் வரத்து குறைவால் நேற்று தக்காளி கிலோ ரூ.150-க்கு விற்பனையானது.
ஈரோடு வ.உ.சி மைதானத்தில் செயல்படும் நேதாஜி காய்கறிச் சந்தைக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து தக்காளி வரத்தாகிறது. நாடு முழுவதும் தக்காளி விளைச்சல் குறைவால், வரத்து குறைந்து தக்காளி விலை அதிகரித்துள்ளது. ஈரோட்டில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு அதிகபட்சமாக கிலோ ரூ.160-க்கு விற்பனையானது.
கூட்டுறவு அமைப்புகள் மூலம் தக்காளியை நேரடியாக கொள்முதல் செய்து ரேஷன் கடைகளில் மலிவு விலையில் விற்பனை செய்யும் அரசின் திட்டமும், தக்காளி விளைச்சல் குறைவால் பலனின்றி போனது. இந்நிலையில் விலை உயர்வால் தக்காளி பயன்பாட்டை உணவகங்கள் மற்றும் இல்லத்தரசிகள் குறைத்துக் கொண்டதால், அதன் விலையில் சற்று சரிவு ஏற்பட்டு, ஒரு கிலோ ரூ.90 முதல் ரூ.110 வரை விற்பனையானது.
நேற்று ஈரோடு சந்தைக்கு ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலத்தில் இருந்து 1,000 பெட்டி தக்காளி மட்டுமே வரத்தானது. இதனால் தக்காளி விலை மீண்டும் உச்சத்தை தொட்டு, கிலோ ரூ.150-க்கு விற்பனையானது.
தாளவாடியில் விற்பனை: தாளவாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் தக்காளி அதிகளவில் பயிரிடப்படுகிறது. கடந்த காலங்களில் தக்காளிக்கு உரிய விலை கிடைக்காததால், இந்த முறை தக்காளி பயிரிடும் பரப்பை விவசாயிகள் குறைத்துள்ளனர். இந்நிலையில் தக்காளியின் விலை உயர்ந்துள்ளது.
தாளவாடி விவசாயிகள் தங்களது தக்காளியை அங்குள்ள கமிஷன் மண்டிகளில் விற்று வருகின்றனர். இங்கு சராசரியாக ரூ.80 முதல் ரூ.100 வரை விற்பனையாகி வந்த தக்காளி நேற்று ரூ.105-க்கு விற்பனையானதாக விவசாயிகள் தெரிவித்தனர்.