தமிழகம்

தக்காளி விலை மீண்டும் உயர்வு: கோயம்பேட்டில் கிலோ ரூ.140-க்கு விற்பனை

செய்திப்பிரிவு

சென்னை: தக்காளி விலை மீண்டும் உயர்ந்துள்ளது. கோயம்பேடு சந்தையில் கிலோரூ.140-க்கு விற்பனை ஆனது.

தமிழகம் மட்டுமல்லாது நாடு முழுவதும் கடந்த இரு மாதங்களாக தக்காளி விலை உயர்ந்து வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை தக்காளி விளைச்சல் குறைவு. மாநிலத் தேவைக்கு ஆந்திரா,கர்நாடக எல்லையோர மாவட்டங்களையே நம்பி இருக்க வேண்டியுள்ளது. கடந்த ஒரு மாதமாக ஒரு கிலோ தக்காளி ரூ.100-க்கு மேல் விற்கப்பட்டு வருகிறது.

அரசு சார்பில் பண்ணை பசுமை கடைகள் மற்றும் நியாய விலைக் கடைகளில் தக்காளி விற்கப்பட்டாலும், விலை குறையவில்லை. இந்நிலையில், கோயம்பேடு சந்தையில் நேற்று தக்காளி விலை கிலோ ரூ.140 ஆக உயர்ந்திருந்தது. வெளிச் சந்தைகளில் சில்லறை விற்பனையில் கிலோ ரூ.160-க்கு மேல் விற்பனையாகி வருகிறது.

இது தொடர்பாக கோயம்பேடு மலர்,காய், கனி வியாபாரிகள் நலச் சங்க தலைவர் எம்.தியாகராஜன் கூறும்போது, ‘‘வட மாநிலங்களிலும் கன மழையால் தக்காளி உற்பத்தி குறைந்துள்ளது. அம்மாநில வியாபாரிகள், கோயம்பேடுக்கு தக்காளி அனுப்பும் விவசாயிகளிடம் இருந்து அதிக விலை கொடுத்து வாங்குகின்றனர்.

இதனால், தக்காளியை கோயம்பேடுக்கு கொண்டு வருவதில் கடும் போட்டி நிலவுகிறது. தற்போது தேனி மற்றும் உடுமலைப்பேட்டை பகுதிகளில் இருந்து கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரத் தொடங்கியுள்ளது. அது எத்தனை நாட்களுக்கு வரும் என்பது தெரியவில்லை. தொடர்ந்து வந்தால், விலை குறைய வாய்ப்புள்ளது’’ என்றார்.

SCROLL FOR NEXT