நாமக்கல்: குமாரபாளையம் நகராட்சி பகுதி தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும், சாலைகளில் குறுக்கும், நெடுக்குமாகக் கடக்கும் நாய்களால் வாகன ஓட்டிகள் விபத்தைச் சந்திக்கும் நிலையுள்ளது. குமாரபாளையம் நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளுக்கு உட்பட்ட பகுதியில் அண்மைக் காலமாகத் தெரு நாய்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக நகரப் பகுதியில் உள்ள பிரதான சாலைகளான சேலம் சாலை, பள்ளிபாளையம் சாலை, எடப்பாடி சாலை, ஆனங்கூர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
அதேபோல, தெருக்களிலும் நாய்கள் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் உள்ளன. இவை தெருக்களில் செல்லும் மாணவ, மாணவிகள், முதியவர்கள் உள்ளிட்டோரை வேட்டை நாய்கள்போல துரத்தி அச்சமூட்டுவதோடு, பலரைக் கடித்துள்ளன. நாய்கள் துரத்தும்போது, அச்சத்தில் ஓடும் முதியவர்கள், பெண்கள் கீழே விழுந்து கை, கால்களில் அடிபட்டு காயம் அடைந்து எழுந்து செல்லும் நிலையுள்ளது. முக்கிய சாலைகளில் சுற்றும் நாய்கள் கூட்டத்துக்கு இடையில் மோதல் ஏற்பட்டு, அங்கும், இங்கும் சாலையைக் கடக்க முயலும்போது, களின் மீது மோதி விபத்து ஏற்படுகிறது.
குறிப்பாக இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் நாய்கள் மோதுவதால், வாகன ஓட்டிகள் கீழே விழுந்து கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனைக்குச் செல்லும் நிலையுள்ளது. இதனால், பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் தெருக்களையும், சாலைகளையும் கடக்கும்போது மிகுந்த அச்சத்துடன் கடக்கும் நிலையுள்ளது.
இதுதொடர்பாக பொதுமக்கள் சிலர் கூறியதாவது: குமாரபாளையம் தெருக்களிலும், சாலைகளிலும் சுற்றும் நாய்களால் தினசரி சிரமத்தைச் சந்தித்து வருகிறோம். முதியவர்களையும், குழந்தைகளையும் சுதந்திரமாகத் தெருக்களில் அனுப்ப முடியாத நிலையுள்ளது. சாலைகளில் செல்லும்போது, வாகன ஓட்டிகளைத் தெரு நாய்கள் வேட்டை நாய்கள்போல துரத்துவதால், வேகமெடுத்து வரும் இருசக்கர வாகனங்களால் நடந்து செல்வோருக்கு விபத்து ஆபத்து உள்ளது.
எனவே, அதிகரிக்கும் நாய்களைக் கட்டுப்படுத்த, நாய்களுக்கு குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். மேலும், மக்களை வேட்டை நாய்கள் போல அச்சுறுத்தும் நாய்களைப் பிடிக்கவும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.