கும்பகோணம்: தமிழக மக்களின் கவலை நீங்குவதற்கான மருந்து, அதிமுக ஆட்சிதான் என்பதை உணர்ந்து வருகின்றனர் என முன்னாள் அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
கும்பகோணத்தில் தஞ்சாவூர் வடக்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. வடக்கு மாவட்ட அதிமுக அவைத்தலைவர் ராம்குமார் தலைமை வகித்தார். கும்பகோணம் ஒன்றிய அதிமுக செயலாளர் அறிவழகன் வரவேற்றார். முன்னாள் எம்பி பாரதிமோகன், முன்னாள் எம்எல்ஏக்கள் ராமநாதன், தவமணி, இளமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற முன்னாள் அமைச்சரும், அதிமுக அமைப்புச் செயலாளருமான காமராஜ் பேசியது, "மதுரையில் ஆகஸ்ட் 20-ம் தேதி அதிமுக சார்பில் வீரவரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் 20 லட்சம் பேர் கூடும் வகையில் பிரம்மாண்ட ஏற்பாடுகளை பொதுச் செயலாளர் பழனிசாமி தலைமையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மாநாட்டில் தஞ்சாவூர் வடக்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் கண்டிப்பாகப் பங்கேற்க வேண்டும்.
எம்ஜிஆர் அதிமுகவைத் தொடங்கி இந்தக் கட்சி 32 ஆண்டுகள் ஆட்சிப் பொறுப்பில் இருந்துள்ளது. அதிமுக கொண்டு வந்த நலத்திட்டங்களை தான் தற்போதைய திமுக அரசு முடக்கியும், ஸ்டிக்கர் ஒட்டியும் வருகிறது. விலைவாசி உயர்வு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனால், கடந்த 40 நாட்களாக தக்காளி விலையை திமுக அரசால் குறைக்க முடியவில்லை.
தற்போது சின்ன வெங்காயம், பூண்டு உள்ளிட்டவற்றின் விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் திமுக மீது மிகுந்த கோபத்தில் உள்ளனர். எனவே, தமிழக மக்களின் கவலை நீங்குவதற்கான மருந்து, அதிமுக ஆட்சிதான் என்பதை உணர்ந்து வருகின்றனர்” என்றார்.