ஒகேனக்கல் பிரதான அருவிக்குச் செல்லும் பாதையைப் பூட்டிய பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலகப் பணியாளர்கள். 
தமிழகம்

ஒகேனக்கல்லுக்கு 18 ஆயிரம் கனஅடி நீர்வரத்து

செய்திப்பிரிவு

தருமபுரி/மேட்டூர்: ஒகேனக்கல் காவிரியாற்றில் விநாடிக்கு 18 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் வரும் நிலையில், அருவி மற்றும் ஆற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் கர்நாடக மாநில அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து, உபரி நீர் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் மாலை விநாடிக்கு 17 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது.

இந்நிலையில், நேற்று பகல் விநாடிக்கு 20 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் வந்தது. இதனால், ஒகேனக்கல்லில் அருவிகள், ஆற்றில் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதையடுத்து, பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலகப் பணியாளர்கள், ஒகேனக்கல் பிரதானஅருவிக்குச் செல்லும் நடைபாதையின் நுழைவுவாயிலைப் பூட்டினர்.

காவிரி ஆற்றில் தண்ணீர் அதிகரித்துள்ளதால், ஒகேனக்கல் உட்பட தருமபுரி மாவட்டத்தில் காவிரி ஆற்றோரப் பகுதிகளை வருவாய், வனம் மற்றும் காவல் துறையினர் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று மாலை நீர்வரத்து 18 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.

மேட்டூர் அணை: மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் மாலை விநாடிக்கு 10,232 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 8 மணிக்கு விநாடிக்கு 12,444 கனஅடியாக உயர்ந்தது. மாலையில் 15,232 கனஅடியாக அதிகரித்தது.

அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 12,000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், அணையின்நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.நேற்று மாலை அணை நீர்மட்டம் 65.01 அடியாகவும், நீர்இருப்பு 28.56 டிஎம்சியாகவும் இருந்தது.

          
SCROLL FOR NEXT