என்எல்சி தலைமை அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஒப்பந்த தொழிலாளர்கள் அங்கேயே உணவு சமைத்து சாப்பிட்டனர். 
தமிழகம்

என்எல்சி தலைமை அலுவலகம் எதிரே ஒப்பந்த தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்

செய்திப்பிரிவு

விருத்தாசலம்: என்எல்சி நிறுவனத்தில் பணியாற் றும் ஒப்பந்த தொழிலாளர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி என்எல்சி தலைமை அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

என்எல்சி இந்தியா நிறுவனத்தில் பல ஆண்டுகளாக நிரந்தரமான வேலைகளை செய்து வரும் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இன்கோசர்வ் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் தங்களது நீண்ட நாள் கோரிக்கையான பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து நிர்வாகத்திடம் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். இதில், புதுச்சேரி மத்திய தொழிலாளர் நல உதவி ஆணையர் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்ததை அடுத்து, நேற்று முன்தினம் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதைத்தொடர்ந்து அன்று இரவே என்எல்சி தலைமை அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர். அங்கேயே உணவு சமைத்து, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், இதுவரை நிர்வாகம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களிடம் எவ்வித பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை.

இதுதொடர்பாக நிர்வாக அதிகாரிகளிடம் கேட்டபோது, “517 ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட தொழிற் சங்கத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தம் ஏற்படுத் தப்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மத்திய தொழிலாளர் நல உதவி ஆணையரை தான் அணுக வேண்டும்” எனத் தெரிவித்தனர்.

இதனிடையே கூலி உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்தி போராடி வரும் தொழிலாளர்களின் கோரிக்கைக்கு, நிர்வாகம் செவி சாய்க்காமல் துச்சமாக நினைத்து கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு முயற்சி செய்யாத நிலையில், கடந்த 26-ம் தேதி முதல் முற்றுகைப் போராட்டம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டத்தை தொழிலாளர்கள் நடத்தி வருகின்றனர். என்எல்சி நிர்வாகம் காலம் தாழ்த்தாமல் இன்கோசர்வ் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வேண்டும் என ஏஐடியுசி தொழிற்சங்க மாநிலக் குழு கேட்டுக் கொண்டது.

SCROLL FOR NEXT