வெயிலைப் பார்த்து ஏமாந்து விடாதீர்; இன்று மாலை அல்லது இரவு வேளையில் சென்னையில் மழை பெய்யும் என வானிலை ஆர்வலரும் பதிவருமான தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழை குறித்து அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் (https://www.facebook.com/tamilnaduweatherman/) அவ்வப்போது பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் அண்மையில் அவர் பதிவிட்ட நிலைத்தகவலில், "வெயில் அடிப்பதால் மழை முடிந்துவிட்டதாக அர்த்தமில்லை. கடந்த செவ்வாய்க்கிழமையைப் போல், இரவு நேரத்திலோ அல்லது அதற்கு முன்னதாகவோகூட மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் அதிக அளவு மழை பெய்யும்.
இலங்கை கடலோர பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையானது அதே பகுதியில் இன்னும் நிலை கொண்டிருக்கிறது. அடுத்த 4, 5 நாட்களுக்கு இதே நிலை தொடரும். இந்த நிலை மழை மேகங்களை திரும்பத் திரும்ப உருவாக்கும். இதனால் மாலை நேரத்தில் மழை வேகமெடுக்கும்.
திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களைப் போல் விருதுநகர், கன்னியாகுமரி, ராமநாதபுரம் மாவட்டங்களிலும் நல்ல மழைக்கு வாய்ப்பிருக்கிறது" எனப் பதிவிட்டுள்ளார்.