சென்னை: சொத்து வரி சுய விவரப் படிவம் தாக்கல் செய்யாதவர்களுக்கு அபராதம் விதிக்க அனுமதி அளிக்கும் தீர்மானம் சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
சென்னை மாநகராட்சியின் மாதந்திர மாமன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமையில் இன்று (ஜூலை 28) நடைபெற்றது. இதில், 50 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில், முக்கியத் தீர்மானங்கள் விவரம்:
* சென்னை மாநகராட்சி மேயருக்கு 30,000; துணை மேயருக்கு 15,000; கவுன்சிலர்களுக்கு 10,000 ரூபாய் மாதந்தோறும் மதிப்பூதியம் வழங்குவதை நடைமுறைப்படுத்த அனுமதி.
* சிந்தாதிரிப்பேட்டை அருணாச்சலம் சாலையில் உள்ள, மே தின விளையாட்டு மைதானம் மற்றும் அண்ணாநகர் மண்டலத்தில் சலவைக்கூடம், விளையாட்டு மைதானம், சமுதாயநலக்கூடம் ஆகியவற்றை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் மேம்படுத்த அனுமதி.
* தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி விதிகள் 2023ன்படி, அரையாண்டிற்கான சொத்து வரியினை முதல் 30 நாட்களுக்குள் செலுத்துவோருக்கு 5 சதவீதம் ஊாக்கத்தொகை அதிகபட்சமாக 5,000 ரூபாய் வரை வழங்கப்படும்.
* அதன்பின், சொத்து வரி செலுத்தாதவர்களுக்கு மாதந்தோறும் ஒரு சதவீதம் தனிவட்டி வசூலிக்கப்படும். அந்த வகையில், 2022 – 23ம் நிதியாண்டுகளில் சொத்து வரி நிலுவை வைத்துள்ளவர்களுக்கு மாதந்தோறும் ஒரு சதவீத தனிவட்டி வசூலிக்கப்படும். அதேநேரம், 2023 – 24ம் நிதியாண்டின் முதல் அரையாண்டிற்கான சொத்துவரி இதுவரை செலுத்தாதவர்களுக்கு, அக்., மாதம் முதல் ஒரு சதவீத தனி வட்டி வசூலிக்கப்படும்.
* உரிய நேரத்தில் சொத்துவரி மதிப்பீடு செய்ய, சுய விவரப் படிவம் தாக்கல் செய்யாத சொத்து உரிமையாளர்களுக்கு ரூ.2000 அல்லது சொத்து வரியில் 5 சதவீதம், இவற்றல் எது அதிகமோ, அதனை தண்டத்தை தொகையாக விதிக்க அனுமதி
* திரு.வி.க.நகர் மண்டலம், செம்பியம் சமுதாய நல கூடத்திற்கு நிகழ்ச்சிக்கான முன்வைப்பு தொகை 10,000லிருந்து, 20,000 ரூபாய் உயர்த்தி நிர்ணயம் செய்ய அனுமதி.
* சென்னை மாநகராட்சியின் டென்னிஸ் கோர்ட், ஷெட்டில் பேட்மிண்டன், ஸ்கேட்டிங் மற்றும் டேபிள் டென்னிஸ் போன்றவற்றை சென்னை மாநகராட்சி பராமரிப்பதற்கு கூடுதல் பணிசுமை ஏற்படுகிறது. எனவே, நிலையான வருவாய் அடிப்படையில் தனியாருக்கு ஒப்பந்தம் அளிக்க அனுமதி
* சென்னை மாநகராட்சி விரிவாக்கப்பட்ட குப்பை அகற்றும் பணிக்காக 50 இலகுரக காம்பாக்டர் வாகனங்கள் ஏழு ஆண்டுகளுக்கு ஒப்பம் போடப்பட்டிருந்தது. தற்போது, அதற்கான காலம் முடிவடைந்ததால், 7.67 கோடி ரூபாய் மதிப்பில், மேலும் இரண்டு ஆண்டுகள் ஒப்பம் அளிக்க அனுமதி.
இவ்வாறு 50 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இன்னோவா கார் நிறுத்தம் - சென்னை மாநகராட்சியின் ஆறு நிலைக்குழு தலைவர்களுக்கு, 1.27 கோடி ரூபாய் மதிப்பில் இன்னேவா கார் கொள்முதல் மற்றும் ஓட்டுநர், பெட்ரோல் மற்றும் இதர செலவுக்கு மொத்தம்1.84 கோடி ரூபாய் செலவிட தீர்மானம் நிறைவேற்றப்பட இருந்தது. அதற்கு மண்டல குழு தலைவர்கள் தங்களுக்கும் கார் வேண்டும் என கோரினர். இதனால், அத்தீர்மானம் நிறுத்தி வைக்கப்பட்டது.