தமிழகம்

மகளிர் உரிமைத் தொகை பணிகளால் கிராம நிர்வாக அலுவலகங்கள் பூட்டப்படுவதாக பொதுமக்கள் புகார்

செய்திப்பிரிவு

திருப்பூர்: மகளிர் உரிமைத் தொகை தொடர்பான பணிகளில் வருவாய்த் துறையினரை ஈடுபடுத்துவதால் கிராம நிர்வாக அலுவலகங்கள் பூட்டப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

இது தொடர்பாக திருப்பூர் ஆட்சியர் தா.கிறிஸ்து ராஜுக்கு பல்லடம் தாலுகா நுகர்வோர் விழிப்புணர்வு இயக்கத் தலைவர் கே.வி.எஸ். மணிக்குமார் நேற்று அனுப்பிய கடிதம்: தமிழ்நாடு அரசின் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டப் பணிகளில் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட வருவாய்த் துறை ஊழியர்களை ஈடுபடுத்துவதால், பொது மக்களின் ஆயிரக்கணக்கான கோரிக்கை மனுக்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக புகார்கள் எழுகின்றன.

தமிழ்நாடு அரசு மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 வழங்கும் திட்டத்தில் அரசாணை பிறப்பித்து, இத்திட்டத்தை நிறைவேற்ற கூட்டுறவு, உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு, இல்லம் தேடி கல்வி திட்டப் பணிகளில் உள்ள தன்னார்வலர்கள் உள்ளிட்டோரை கொண்டு செயல்படுத்தும் நோக்கில், அதற்கான பயிற்சிக் கூட்டங்கள் மாவட்ட நிர்வாகத்தால் பலமுறை நடத்தப்பட்டது.

மேலும், ரேஷன் கடை ஊழியர்கள் மூலமாக விண்ணப்பப் படிவம் வழங்கப்பட்டு பூர்த்தி செய்யப்பட்ட மனுக்களை பெறும் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதில், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட வருவாய்த் துறை ஊழியர்களை ஈடுபடுத்துவது தேவையற்றது.

ஏற்கெனவே, பல்லடம் வட்டத்தில் வருவாய்த் துறையில் 4 ஆயிரம் மனுக்கள் நடவடிக்கை இன்றி தேங்கியுள்ளன. இந்நிலையில், கடந்த 4 நாட்களாக எந்த வித முன்னறிவிப்பும் இல்லாமல் கிராம நிர்வாக அலுவலகங்கள் பூட்டப்பட்டுள்ளன. மேலும், 10 நாட்களுக்கு மகளிர் உரிமைத்தொகை திட்டப்பணிகளை தவிர வேறு பணிகளில் ஈடுபடக்கூடாது என மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளதாக தெரிகிறது.

இதனால், வருவாய்த்துறையில் மனுக்கள் பெருமளவில் தேக்கமடைந்து, பொதுமக்கள் காத்திருக்கும் அவல நிலை ஏற்படும். மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டப் பணிகளில், ஏற்கெனவே 4 துறை அலுவலர்கள் ஈடுபட்டு வருவதால், மேற்படிதிட்டப் பணியில் வருவாய்த் துறையினர் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT