சென்னை: சட்ட விரோத பணப் பரிவர்த்தனை புகார் தொடர்பாக பிஎஃப்ஐ முன்னாள் மாநில தலைவர், நிர்வாகிகள் வீடுகளில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
இந்தியாவில் தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததாகவும், அந்த அமைப்புகளுக்கு நிதி உதவி வழங்கியதாகவும் பாப்புலர் ப்ரன்ட்ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்பு மீது எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், கடந்த ஆண்டுசெப்டம்பரில் நாடு முழுவதும்15 மாநிலங்களில் பிஎஃப்ஐ நிர்வாகிகளின் அலுவலகங்கள், வீடுகள் என 100-க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இதேபோல, தமிழகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியானது. 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், பிஎஃப்ஐ மற்றும் தொடர்புடைய பல அமைப்புகள் பல்வேறு குற்றச்செயல்கள் மற்றும் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டுள்ளதாகவும், சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் பிஎஃப்ஐ அமைப்பு தொடர்பில் இருந்ததாகவும் மத்திய அரசு தெரிவித்திருந்தது.
இதையடுத்து உபா எனப்படும் சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின்படி, பாப்புலர் ப்ரன்ட் ஆஃப் இந்தியா மற்றும் அதனுடன் தொடர்புடைய 8 அமைப்புகள் சட்டவிரோத இயக்கமாக அறிவிக்கப்பட்டு, 5 ஆண்டுகள் செயல்பட மத்திய அரசு தடை விதித்தது.
இந்நிலையில், என்ஐஏ சோதனையில் கைப்பற்ற ஆவணங்களை ஆய்வு செய்தபோது, அதில்,இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்குப் பணம் அனுப்பியது தொடர்பான பல்வேறு ஆவணங்கள் சிக்கியதாகக் கூறப்படுகிறது.
அந்த ஆவணங்களின் அடிப்படையில் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தில் கீழ் அமலாக்கத் துறை அதிகாரிகள், பிஎஃப்ஐ முன்னாள் மாநில தலைவர், நிர்வாகிகள் வீடு, அலுவலகங்களில் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.
அதன்படி, பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் உள்ள முன்னாள் மாநிலதலைவர் இஸ்மாயில் வீடு, புரசைவாக்கம் தாக்கர் தெருவில் உள்ள நிர்வாகி துரப் வீடு, வேப்பேரி வெங்கடாசலம் தெருவில் உள்ள நிர்வாகி இஸ்மாயில் அக்சர் வீடு என சென்னையில் 3 இடங்களில், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் அமலாக்கத் துறை சோதனை நடந்தது.
இந்த சோதனையில் வங்கி கணக்குப் புத்தகங்கள், டிஜிட்டல் ஆவணங்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஆவணங்களை அமலாக்கத் துறை அதிகாரிகள் கைப்பற்றியதாகக் கூறப்படுகிறது. சோதனை முழுமையாக முடிவடைந்த பிறகுதான் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பான தகவல்களை தெரிவிக்க முடியும் என அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.