மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 10,232 கன அடியாக அதிகரித்துள்ளது.
கேரளா மற்றும் கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில், தென்மேற்குப் பருவமழை தற்போது தீவிரமடைந்துள்ளது. தொடர்ந்து கர்நாடகாவில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அங்குள்ள கபினி மற்றும் கேஆர்எஸ் அணைகள் வேகமாக நிரம்பி வரும் நிலையில், அவற்றிலிருந்து உபரி நீர் காவிரியில் திறக்கப்பட்டுள்ளது.
காவிரியில் திறக்கப்பட்ட நீர், தற்போது மேட்டூர் அணையை வந்தடைந்துள்ளது. மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் இரவு (ஜூலை 26) நீர் வரத்து விநாடிக்கு 2,100 கனஅடியாக இருந்த நிலையில், உபரி நீர் வரத்து காரணமாக நேற்று (ஜூலை 27) காலை 8 மணி நிலவரப்படி விநாடிக்கு 3,343 கனஅடியாக நீர் வரத்து அதிகரித்துள்ளது. தொடர்ந்து, நேற்று மாலை 4 மணி நிலவரப்படி விநாடிக்கு 10,232 கனஅடியாக நீர் வரத்து அதிகரித்துள்ளது.
அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 12,000 கனஅடி வீதம் நீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கிய நிலையில், அணையின் நீர் மட்டம் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. அணையின் நீர் மட்டம் நேற்று முன்தினம் காலை 65.80 அடியாக இருந்த நிலையில், நேற்று காலை 64.87 அடியாக இருந்தது. அதேபோல், நேற்று முன்தினம் காலை நீர் இருப்பு 29.19 டிஎம்சியாக இருந்து நிலையில், நேற்று காலை 28.44 டிஎம்சியாக இருந்தது.
மேட்டூர் அணைக்கு நேற்று மாலை 4 மணி முதல் 10 ஆயிரம் கன அடி நீர் வரத்து இருப்பதால் அணியின் நீர்மட்டம் நேற்று மாலை 4 மணி நிலவரப்படி, நீர்மட்டம் 64.80 அடியாகவும், நீர் இருப்பு 28.39 டிஎம்சியாகவும் உள்ளது.