காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் போதிய பணியாளர்கள் இல்லாததால் அண்ணா கிளை நூலகத்தில் உள்ள டிஜிட்டல் நூலகம் செயல்பாடு இல்லாமல் முடங்கி கிடப்பது தொடர்பாக "இந்து தமிழ்" நாளிதழில் செய்தி வெளியானது. இதனைத் தொடர்ந்து அந்த நூலகத்தில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
காஞ்சிபுரம் ரங்கசாமி குளம் அருகே உள்ள விளக்கொளி பெருமாள் கோயில் தெருவில் அண்ணா கிளை நூலகம் செயல்பட்டு வருகிறது. இந்தக் கிளை நூலகமானது மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய நூலகத்தில் ஒன்றாகும். இந்த நூலகத்தில் போட்டித் தேர்வுகள், பொது அறிவுக்கு தேவையான புத்தகங்கள் உட்பட அனைத்து விதமான புத்தகங்களும் இருப்பதால் தினந்தோறும் 200-க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.
இந்த நூலகத்தை வாசகர்கள் அதிகம் பயன்படுத்துவதால் இந்த நூலகத்தில் ஒரு பகுதியாக டிஜிட்டல் நூலகத்தை தொடங்க நூலகத் துறை முடிவு செய்தது. அதன்படி 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் டிஜிட்டல் நூலகம் தொடங்கப்பட்டது. இந்த டிஜிட்டல் நூலகத்தில் 25 கம்ப்யூட்டர்கள் மற்றும் இணையதள வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
பார்வையற்றோர் படிக்க பிரெய்லி புத்தகங்கள், சிறுவர் பகுதி என பல்வேறு வசதிகளும் இந்த நூலகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் போதிய நூலகர் பணியிடங்கள்இங்கு இல்லாததால் டிஜிட்டல் நூலகம் செயல்பாடில்லாமல் முடங்கிய நிலையில் உள்ளது. இது தொடர்பான செய்தி "இந்து தமிழ்" நாளிதழில் கடந்த ஜூலை 25-ம் தேதி வெளியானது.
இதையடுத்து அந்த நூலகத்தை மாவட்டஆட்சியர் கலைச்செல்வி நேற்று திடீரென்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது கோட்டாட்சியர் ரம்யா, உதவி ஆட்சியர் (பயிற்சி) அர்பித் ஜெயின், சங்கீதா உள்ளிட்டோர் உடன் இருந்தனர். அப்போது அந்த டிஜிட்டல் நூலகம் ஏன் செயல்படாமல் உள்ளது என்று ஆட்சியர் கேட்டார்.
அவரிடம் பணியாளர் பற்றாக்குறை இருப்பது குறித்து தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த நூலகம் முழுமையாக செயல்பட தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அப்போது ஆட்சியர் தெரிவித்தார்.