சென்னை: மேகேதாட்டு அணை விவகாரத்தில் தமிழக அரசு கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: காவிரி படுகையில் நிலவும் சூழலும், கர்நாடகமும், மத்திய அரசும் நடந்து கொண்ட விதமும் ஒரு உண்மையை உறுதி செய்திருக்கின்றன. கர்நாடக அணைகளுக்கு விநாடிக்கு ஒரு லட்சம் கன அடிக்கும் கூடுதலாக தண்ணீர் வந்தாலும், கபினியில் வழிந்த மிகை நீரைத் தவிர, மற்ற அணைகளுக்கு வந்த தண்ணீரை தமிழகத்துக்கு திறந்துவிட கர்நாடக அரசு முன்வரவில்லை. நடுவர் மன்றத் தீர்ப்பை மதிக்கவில்லை என்பதுதான் உண்மை.
மேகேதாட்டு அணை கட்டப்பட்டால், மொத்தமுள்ள 5 அணைகளிலும் 181 டி.எம்.சி தண்ணீரை தேக்கி வைத்த பிறகுதான் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடுவோம் என்பதை கர்நாடக அரசு மீண்டும் ஒருமுறை சொல்லாமல் சொல்லியிருக்கிறது. மேகேதாட்டு அணை கட்டப்பட்டால் தமிழகம் பாலைவனமாவதை தடுக்க முடியாது. அதனால், இந்த விவகாரத்தில் தமிழக அரசு கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.