சென்னையில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் பங்கேற்ற வெளிநாட்டு பிரதிநிதிகள் மாமல்லபுரம் கடற்கரை கோயிலை கண்டு ரசித்தனர். 
தமிழகம்

மாமல்லபுரம் புராதன சின்னங்களை ஜி-20 மாநாட்டு பிரதிநிதிகள் கண்டு ரசிப்பு

செய்திப்பிரிவு

மாமல்லபுரம்: சென்னையில் நடைபெற்ற ஜி-20 மாநாட்டில் பங்கேற்ற வெளிநாட்டு பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர், மாமல்லபுரத்தில் கடற்கரைகோயில் உள்ளிட்ட சிற்பங்களை கண்டு ரசித்தனர்.

ஜி20 நாடுகளின் கூட்டமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றதை தொடர்ந்து, பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்குகள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருகின்றன. இதில், சென்னையில் ஜி-20 பேரிடர் அபாயத் தணிப்பு பணிக்குழு மாநாடு கடந்த 24 மற்றும் 25-ம் தேதி என இரண்டு நாட்கள் நடைபெற்றது.

இந்த மாநாட்டில், அமெரிக்கா, ரஷ்யா, பிரேசில், அர்ஜென்டினா, ஆஸ்திரேலிய உள்ளிட்ட ஜி20 நாடுகளை சேர்ந்த விருந்தினர்கள், பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்நிலையில், மேற்கண்ட மாநாட்டில் பங்கேற்ற வெளிநாட்டு பிரதிநிதிகள் நேற்று மாலை 5 மணி முதல் 6 மணி வரை மாமல்லபுரத்தில் உள்ள பல்லவ மன்னர்களின் கலைச் சின்னங்களான கடற்கரை கோயில், ஐந்துரதம், அர்ச்சுனன் தபசு உள்ளிட்ட புராதன சின்னங்களை கண்டு ரசிக்க, சுற்றுலாத் துறை ஏற்பாடு செய்திருந்தது.

இதன்பேரில், சென்னையில் இருந்து மாமல்லபுரத்துக்கு சொகுசுபேருந்துகளில் வந்த 120 பிரதிநிதிகள் கொண்ட குழுவினர் ஐந்து ரதம், அர்ஜுனன் தபசு பகுதியை சுற்றி பார்த்தனர். மேலும், நிறைவாக கடற்கரை கோயிலை நேரில்கண்டு ரசித்தனர். இதில், சுற்றுலாத் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சுற்றுலா வழிகாட்டிகள் புரதான சின்னங்களின் வரலாற்று சிறப்புகளை வெளிநாட்டினருக்கு விரிவாக எடுத்துக் கூறினர். பின்னர், தனியார் நட்சத்திர விடுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்தில் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில், ஜி20 மாநாட்டு விருந்தினர்கள் மற்றும் பிரதிநிதிகளுக்கான பாதுகாப்புபணியில் மோப்ப நாய்களும் ஈடுபடுத்தப்பட்டிருந்தன. மேலும், ட்ரோன் கேமராக்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டிருந்தன. மாவட்ட எஸ்பி சாய் பிரனீத் தலைமையில், 200-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

SCROLL FOR NEXT