தமிழகம்

பல்கலை.கள் ஒருங்கிணைந்து செயல்பட ஆளுநர் ஆர்.என்.ரவி வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகம் அறிவுப்பூர்வமான மாநிலம் என்ற பெருமையைத் தக்கவைக்க, பல்கலைக்கழகங்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார்.

நாடு முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களுக்கான தேசிய தரவரிசைப் பட்டியலை மத்திய கல்வி அமைச்சகத்தின் என்ஐஆர்எஃப் என்ற அமைப்பு 2016-ம் ஆண்டு முதல் வெளியிட்டு வருகிறது.

2023-ம் ஆண்டுக்கான தரவரிசைப் பட்டியல் அண்மையில் வெளியானது. அதில், சென்னைஐஐடி, மாநிலக் கல்லூரி உள்ளிட்டஉயர்கல்வி நிறுவனங்கள் இடம்பெற்றிருந்தன. இந்நிலையில், தேசிய தரவரிசையில் முதல் 20 இடங்களுக்குள் உள்ள தமிழக உயர்கல்வி நிறுவனங்களுக்கான பாராட்டு விழா சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நேற்று நடைபெற்றது.

ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், சென்னை ஐஐடி இயக்குநர் வி.காமகோடி, சென்னை பல்கலை. துணைவேந்தர் எஸ்.கவுரி மற்றும் பல்வேறு கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். எனினும், சென்னை மாநிலக் கல்லூரி, சென்னை மருத்துவக் கல்லூரி சார்பில் யாரும் பங்கேற்கவில்லை. இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ரவி பேசியதாவது:

உயர்கல்வி நிறுவனங்களுக்கு இடையே கருத்துப் பரிமாற்றங்கள் ஆரோக்கியமாக இல்லை.அதை சரிசெய்யவே இத்தகையநிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கவுரி கூறியதுபோல, தமிழக பல்கலை.களில் நிதிப் பற்றாக்குறை மற்றும் காலி பணியிடங்கள் அதிகம் இருப்பது உண்மைதான். அவை சரிசெய்யப்பட வேண்டும்.

கணிதப் பாடம் கடினமானது: தற்போதுள்ள கணிதப் பாடம் மிகவும் கடினமானது என்ற எண்ணம் மாணவர்களிடம் நிலவுகிறது. அதை, தங்கள் கற்பித்தலின் மூலம் எளிமையாக மாற்ற ஆசிரியர்கள் முன்வர வேண்டும்.

உலகின் பழமையான மொழி தமிழ். ஐரோப்பிய மொழிகள் ஒருபோதும் தமிழ், சம்ஸ்கிருத மொழிகளுக்கு இணையாகாது. அதை உலகுக்கு எடுத்துச் சொல்ல, தமிழ் மொழியில் அதிக ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும். அதற்குசில இடையூறுகள் இருப்பதாகதஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் கூறுகிறது. அதை சரிசெய்ய வேண்டும்.

அதேபோல, மத்திய அரசின் மானியம் தவிர்த்து, நிதிகளைத் திரட்ட பல்வேறு வழிகள் உள்ளன. அவற்றை பல்கலைக்கழகங்கள் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தற்போது திறன்வாய்ந்த இளைஞர்களுக்கான தேவை அதிகம் உள்ளது. அதற்கேற்ப கல்வியைவழங்க வேண்டியது அவசியம்.

பொறியியல் பட்டதாரிகள் ரூ.12,000 ஊதியத்தில், அவர்கள் தகுதிக்கு குறைந்த வேலையை செய்வதைப் பார்க்கும்போது வருத்தம் அளிக்கிறது.

தமிழகம் அறிவுப்பூர்வமான மாநிலம் என்ற பெருமையைத் தக்கவைக்க வேண்டுமெனில், பல்கலைக்கழகங்கள் இணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு ஆளுநர் ரவி பேசினார்.

SCROLL FOR NEXT