பல்லாவரம்: பல்லாவரம் சங்கர் நகர், குன்றத்தூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று, பம்மல் சங்கர் நகர் காவல் நிலைய வளாகத்தில், பல்லாவரம்அனைத்து மகளிர் காவல் நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த காவல் நிலையத்தை, தாம்பரம் காவல் ஆணையர் அ.அமல்ராஜ் நேற்று திறந்து வைத்தார். இங்கு காவல் ஆய்வாளர் தலைமையில், துணை ஆய்வாளர் உள்ளிட்ட 9 பெண் காவலர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
புதிய மகளிர் காவல் நிலையம்அமைக்கப்பட்டதன் மூலம், பெண்கள், குழந்தைகளுக்கான குற்றங்கள் தொடர்பாக தயக்கமின்றிப் புகார் அளிக்கலாம்.
இதேபோல, விரைவில் செம்மஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலையமும் திறக்கப்பட உள்ளது. அதற்காக இடத்தை தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.
மேலும், மணிமங்கலம், கேளம்பாக்கம் பகுதிகளிலும் விரைவில் காவல் நிலையம் திறக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை எழுந்து உள்ளது.