மதுரை: திமுகவினரின் ஊழல் பட்டியலை வெளியிடும் அண்ணாமலை அதிமுகவினரின் ஊழல் பட்டியலை வெளியிடாதது ஏன் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பினார்.
மதுரையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடலூரில் பயிர் சாகுபடி செய்த நிலங்களை என்.எல்.சி அழித்து வருகிறது. திமுகவினரின் ஊழல் பட்டியலை வெளியிடும் பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுகவினரின் ஊழல் பட்டி யலை ஏன் வெளியிடவில்லை. கோட நாட்டில் மின்சாரத்தைத் துண்டித்து கொலை, கொள்ளை நடந்துள்ளது.
மணிப்பூர் கலவரம் குறித்து திமுகவினர் பேசுவது வியப்பாக உள்ளது. நூலகம், பல்நோக்கு மருத்துவமனை என பல கட்டிடங்களுக்கு கருணாநிதி பெயர் சூட்டப்படுகிறது. டாஸ்மாக் கடைகளுக்கு கருணாநிதி பெயரை ஏன் சூட்டவில்லை? காங்கிரஸ் - திமுக, அதிமுக - பாஜக ஓட்டு அரசியலுக்காக கூட்டு சேர்ந்துள்ளன.
அண்ணாமலையின் நடைப் பயணத்தால் தமிழகத்தில் தாமரை மலராது. இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக பரவையில் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் சீமான் பங்கேற்றார்.