திருநெல்வேலி: திருநெல்வேலி வண்ணார் பேட்டையில் பாழடைந்த மோட்டார் அறையில் மின்கசிவு காரணமாக, மின்சாரம் தாக்கி 7 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி வண்ணார்பேட்டை அம்பேத்கர் நகர் குடியிருப்பைச் சேர்ந்த சக்திவேல்- சோனியா தம்பதிக்கு 2 மகன்கள், ஒரு மகள் என, 3 குழந்தைகள். சக்திவேலின் ஏழு வயது மகள் சத்யா தச்சநல்லூரில் உள்ள பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று உடல் நலக்குறைவால் அவர் பள்ளிக்கு செல்லவில்லை. தனது சகோதரனுடன் அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது சத்யாவின் கையில் மாட்டுச்சாணம் பட்டுள்ளது. அதை கழுவுவதற்காக அருகே சிறிய நீர்த்தேக்க தொட்டி அமைந்துள்ள இடத்துக்கு சென்றுள்ளார். அங்கிருந்த குழாயில் தண்ணீர் வரவில்லை. இதனால் அருகிலுள்ள மோட்டார் அறைக்குள் செல்வதற்காக இரும்பு கதவை தொட்டு திறக்க முற்பட்டுள்ளார். அப்போது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே சத்யா உயிரிழந்தார்.
மாநகராட்சி சார்பில் அமைக்கப் பட்டுள்ள சிறிய நீர்த்தேக்க தொட்டியில் ஆழ்துளை கிணறு மூலம் தண்ணீரை உறுஞ்சி நிரப்புவதற்காக மின்மோட்டார் அறை அமைக்கப்பட்டுள்ளது. அந்த அறை மிகவும் பாழடைந்த நிலையில் இருக்கிறது. பராமரிப்பின்றி உள்ள அந்த அறையில் பைப்லைனில் மின்கசிவு ஏற்பட்டு, அறை முழுக்க மின்கசிவு இருந்துள்ளது.
இதை அறியாமல் அறையின் இரும்பு கதவை சிறுமி தொட்டவுடன் மின்சாரம் தாக்கியுள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மின் வாரிய ஊழியர்கள் அந்த அறைக்கு செல்லும் மின் இணைப்பை துண்டித்தனர். பாளையங்கோட்டை போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மின்சார அறையை முறையாக சீரமைக்காமல் மாநகராட்சி நிர்வாகம் அலட்சியமாக இருந்ததால், மின்சாரம் தாக்கி சிறுமி உயிரிழந்துவிட்டதாக பொது மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.