தூத்துக்குடி கடல் பகுதியில் ஆயுதங்களுடன் அமெரிக்க கப்பல் பிடிபட்ட வழக்கில் கப்பல் கேப்டன் உள்ளிட்ட 35 பேருக்கும் கீழமை நீதிமன்றம் வழங்கிய 5 ஆண்டு சிறைத் தண்டனையை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 23 பேரையும் பாளையங்கோட்டையில் அடைக்கப்பட்டுள்ள 12 பேரையும் உடனடியாக விடுதலை செய்யவும், பணம் மற்றும் பாஸ்போர்ட்டை திரும்ப வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
தூத்துக்குடி கடல்பகுதியில் அத்துமீறி நுழைந்ததாகவும், உரிய ஆவணங்கள் இல்லாமல் ஆயுதங்கள் வைத்திருந்ததாகவும் சீமேன் கார்டு ஓகியோ என்ற அமெரிக்க கப்பலை அக்.2013-ல் கியூ பிராஞ்ச் போலீஸார் சிறை பிடித்தனர்.
இந்த கப்பலின் கேப்டன் டுட்னிக் வாலண்டைன் (64), துணை கேப்டன் பால் டேவிட் டேனிஷ் தவார் (50) உட்பட 35 பேரையும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்களில் 12 இந்தியர்கள். எஞ்சிய 23 பேரும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவர்கள் கைது செய்யப்பட்டு 9 மாதங்கள் சிறையில் இருந்த நிலையில் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்த வழக்கை விசாரித்த தூத்துக்குடி முதன்மை அமர்வு நீதிமன்றம், கேப்டன் உள்ளிட்ட 35 பேருக்கும் தலா 5 ஆண்டு சிறை தண்டனை வழங்கி ஜன.2014-ல் தீர்ப்பளித்தது. இதையடுத்து 35 பேரும் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
தூத்துக்குடி நீதிமன்றம் வழங்கிய சிறை தண்டனையை ரத்து செய்யக்கோரி 35 பேரும் உயர் நீதிமன்ற கிளையில் மேல்முறையீடு செய்தனர். தண்டனையை நிறுத்திவைத்து தங்களை ஜாமீனில் விடுதலை செய்யக்கோரி துணை மனு தாக்கல் செய்தனர். இந்த மனு தள்ளுபடி
ஆனது.
இதனிடையே 35 பேரின் மேல்முறையீட்டு மனுக்கள் கடந்த ஆண்டு நவம்பரில் நீதிபதி ஏ.கே.பஷீர்அகமது முன் விசாரணைக்கு வந்தன. இருதரப்பு வாதங்கள் முடிந்த நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இவ்வழக்கில் நீதிபதி பஷீர் அகமது நேற்று தீர்ப்பளித்தார்.
நீதிபதி உத்தரவில் கூறியிருப்பதாவது: மேல்முறையீட்டு மனுதாரர்கள் மீது இந்திய ஆயுதச் சட்டப் பிரிவுகள் 25 (1-ஏ), 25 (1-பி), 25 (1-இ) ஆகியவற்றின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இப்பிரிவுகளின் கீழ் மனுதாரர்கள் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை. மனுதாரர்கள் பயணம் செய்த கப்பல் தூத்துக்குடி கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததற்கு ஆதாரமாக போலீஸார் தாக்கல் செய்துள்ள கடல் எல்லை வரைபடம் எல்லையை சரியாக தெரிவிக்கவில்லை. மனுதாரர்கள் மீது பிற சட்டங்களின் கீழ் தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளையும் போலீஸார் நிரூபிக்கவில்லை.
எனவே மனுதாரர்களுக்கு கீழமை நீதிமன்றம் வழங்கிய சிறை தண்டனை ரத்து செய்யப்படுகிறது. மனுதாரர்கள் 35 பேரையும் அவர்கள் மீது வேறு வழக்குகள் இல்லாத நிலையில் உடனடியாக சிறையில் இருந்து விடுதலை செய்ய வேண்டும். மனுதாரர்கள் டெபாசிட் செய்த பணம், பாஸ்போர்ட் மற்றும் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்த ஆவணங்களை திரும்ப வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.
35 பேரும் கடந்த 4 ஆண்டுகளாக சிறையில் இருந்து வருகின்றனர். ஒரு ஆண்டு சிறை தண்டனை பாக்கியுள்ள நிலையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 35 பேரில் திண்டுக்கல்லை சேர்ந்த ராஜன் தண்டபாணி என்ற இளைஞரும் ஒருவர்.