ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் வனத்துறை சார்பில் 5 ஆண்டுகளுக்குப் பின் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்துக்கு மாவட்ட வன அலுவலர் வராததால் விவசாயிகள் கூட்டத்தில் இருந்து வழிநடப்பு செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் வன விரிவாக்கம் மைய அலுவலகத்தில் மாதம் ஒரு முறை விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்று வந்தது. இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளாக வனத்துறை சார்பில் விவசாயிகள் குறைதீர கூட்டம் நடத்தப்படவில்லை. இதனால் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளான ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, ராஜபாளையம் பகுதி விவசாயிகள் வனத்துறை தொடர்பான பிரச்சனைகளை தீர்க்க வழியின்றி சிரமத்தில் இருந்தனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாதம்தோறும் நடைபெறும் குறைதீர் கூட்டத்தில், வனத்துறை சார்பில் கூட்டம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், தமிழக அரசு கடந்த மாதம் வெளியிட்ட அரசாணையில் விவசாயிகள் விளைநிலங்களில் மின்வேலி அமைப்பதற்கு வனத்துறை அனுமதி பெறுவது கட்டாயம் என அறிவித்தது. இதுகுறித்து கடந்த மாதம் நடந்த குறைதீர் கூட்டத்தில் வனத்துறை சார்பில் குறைதீர் கூட்டம் நடத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அப்போது மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் வனத்துறை, வருவாய்த்துறை, விவசாயிகள் அடங்கிய முத்தரப்பு கூட்டம் ஜூலை 26-ம் தேதி வன விரிவாக்க மையத்தில் நடத்தப்படும் என தெரிவித்தார்.
அதன்படி இன்று காலை 11 மணிக்கு ஶ்ரீவில்லிபுத்தூரில் உள்ள வன விரிவாக்க மையத்திற்கு சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் வந்தனர். 12 மணிக்கு ஆர்.டி.ஒ விஸ்வநாதன், வட்டாட்சியர் செந்தில்குமார், உதவி வன அலுவலர் நிர்மலா உள்ளிட்டோர் கூட்டத்திற்கு வந்தனர். ஆனால் மாவட்ட வன அலுவலர் கூட்டத்திற்கு வராததால் விவசாயிகள் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். அதன்பின் மாவட்ட வன அலுவலரை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட வன அலுவலரை இடமாற்றம் செய்ய வேண்டும், வனவிலங்குகளால் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும், மாதம்தோறும் வனத்துறை சார்பில் கூட்டம் நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இது குறித்து விவசாயிகள் சங்க பிரதிநிதி ராமச்சந்திர ராஜா கூறுகையில், ''விளைநிலங்களில் மின்வேலி அமைப்பதற்கு வனத்துறை அனுமதி கட்டாயம் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் யானை, காட்டு மாடு, காட்டு பன்றி, குரங்கு, மான் உள்ளிட்ட வன விலங்குகள் விவசாய பயிர்களை சேதப்படுத்துவதால் விவசாயிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதுகுறித்து முறையிடுவதற்கும், கோரிக்கைகளை தெரிவிப்பதற்கும் வனத்துறை அதிகாரிகளை விவசாயிகளால் எளிதில் தொடர்புகொள்ள முடியவில்லை.
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று ஆட்சியர் ஜெயசீலன் வனத்துறை, வருவாய், விவசாயிகள் இணைந்த முத்தரப்பு கூட்டம் 26-ம் தேதி நடைபெறும் என தெரிவித்தார். அதன்படி இன்று நூற்றுக்கு மேற்பட்ட விவசாயிகள் வனத்துறை அலுவலகம் வந்துள்ளோம். ஆனால் அரசு அதிகாரிகளையும் விவசாயிகளையும் மதிக்காத மாவட்ட வன அலுவலர் திலீப்குமார் கூட்டத்திற்கு வரவில்லை. அதை கண்டித்து விவசாயிகள் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். மாவட்ட வன அலுவலர் திலீப்குமார் பதவியேற்றதில் இருந்து விவசாயிகள் குறைதீர்க்க கூட்டம் நடத்தப்படவில்லை. விவசாயிகளுக்கு எதிராக செயல்படும் மாவட்ட வன அலுவலரை பணியிட மாற்றம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். சுமார் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால், வனத்துறை அலுவலகத்தில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர்.