திருச்சி: தமிழகத்தில் முதன்முறையாக அரசு சார்பில் திருச்சியில் 3 நாட்கள் நடைபெறும் வேளாண் சங்கமம் கண்காட்சி நாளை(ஜூலை 27) தொடங்குகிறது. இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திருச்சி வருகிறார்.
தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை சார்பில் மாநில அளவிலான வேளாண் சங்கமம்-2023 என்ற வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு, திருச்சி கேர் கல்லூரி வளாகத்தில் நாளை தொடங்கி 3 நாட்கள் நடைபெறுகிறது. இந்த கண்காட்சிக்கென ஏறத்தாழ 10 ஏக்கர் பரப்பளவிலான இடத்தில் 230 உள்ளரங்குகளும், 50 வெளி அரங்குகளும் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த கண்காட்சியில் மாநில அரசின் 17 துறைகள், மத்திய அரசின் 8 ஆராய்ச்சி நிறுவனங்கள், வேளாண்மை சார்ந்த 3 பல்கலைக்கழகங்கள், 80-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களின் சார்பில் அரங்குகள் இடம் பெறுகின்றன.
இந்தக் கண்காட்சியில் பாரம்பரிய நெல் மற்றும் இதர பயிர் வகைகள், வேளாண் கருவிகள், பல்வகை தென்னை ரகங்கள், செயல்விளக்கதிடல்கள், பசுமைக் குடில்கள், மண்ணில்லா விவசாயம், நவீன இயந்திரங்கள், ட்ரோன்கள் உள்ளிட்ட நவீன வேளாண் கருவிகள் காட்சிப்படுத்தப்படவுள்ளன.
மேலும், விவசாயிகளுக்கு புதிய தொழில்நுட்பம் குறித்த பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்குகள், விவசாயிகள்- விஞ்ஞானிகள் கலந்துரையாடல், செயல்விளக்கம் மற்றும் வேளாண் துறை திட்டங்கள் சார்ந்த விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன. வேளாண் இடுபொருட்கள் விற்பனையும், நவீன வேளாண் இயந்திரங்களின் செயல்விளக்கங்களும் இந்த கண்காட்சியில் இடம்பெறவுள்ளன.
இந்த கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை (ஜூலை 27) காலை 9 மணியளவில் தொடங்கி வைத்து அரங்குகளை பார்வையிட்டுப் பேசுகிறார்.
தஞ்சாவூர் நிகழ்ச்சி: முன்னதாக, மத்திய மண்டலத்துக்குட்பட்ட திமுகவின் 15 மாவட்டங்களைச் சேர்ந்த திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கு திருச்சி ராம்ஜி நகரில் இன்று நடைபெறும் பயிற்சி பாசறைக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றுப் பேசுகிறார்.
இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து இன்று காலை விமானத்தில் புறப்பட்டு, திருச்சிக்கு காலை 11 மணிக்கு வருகிறார். திருச்சியில் இன்றும், நாளையும் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பின், நாளை காலை 10.45 மணிக்கு தஞ்சாவூர் செல்கிறார். அங்கு புதிய பேருந்து நிலையம் அருகே மாநகராட்சியின் பன்னோக்கு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட 14 திட்டப் பணிகளை தொடங்கி வைக்கிறார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் திருச்சி வந்து, இரவு 9 மணிக்கு விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டுச் செல்கிறார்.