சென்னை: உச்ச நீதிமன்ற தீர்ப்பில் உள்ள மாத பங்கீட்டின்படி காவிரி நீர் வழங்கப்பட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையத் தலைவரிடம் தமிழக விவசாயிகள் நேற்று வலியுறுத்தினர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பி.எஸ். மாசிலாமணி தலைமையில் விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் மு.சேரன், நாகை மாவட்டச் செயலாளர் ஆர்.கே.பாபுஜி, தஞ்சை மாவட்டச் செயலாளர் சாமு.தர்மராஜ் மற்றும் நிர்வாகிகள் டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தரை நேற்று சந்தித்து, கோரிக்கை மனுவை அளித்தனர்.
அப்போது, ஜூன், ஜூலை மாதம் தமிழகத்துக்குக் கொடுக்க வேண்டிய காவிரி நீரை ஆகஸ்ட் மாத இறுதிக்குள் கொடுத்து விடலாம் என ஆணையம் சார்பில் கூறியதை விவசாயிகள் ஏற்க மறுத்தனர். மேலும், தீர்ப்பில் உள்ள மாத பங்கீட்டின்படி ஒவ்வொரு மாதமும் தண்ணீர் திறந்து விடுவதில் ஆணையம் உறுதியான நடைமுறையைப் பின்பற்ற வேண்டும், மேகேதாட்டு அணையை கட்ட அனுமதி அளிக்கக் கூடாது எனவும் வலியுறுத்தப்பட்டது.
அதற்கு, அணை கட்டுவது குறித்து தற்போது ஆய்வில் இல்லை என்று ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், 5 லட்சம் ஏக்கர் குறுவை நெல் சாகுபடி அழிந்தால் அதற்கு, கர்நாடகாதான் பொறுப்பாகும் என்பதை அறிந்து, ஆணையம் நியாயமாகக் கூட்டம் நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் எனவும் விவசாயிகள் கேட்டுக் கொண்டனர்.
இச்சந்திப்புக்கான ஏற்பாடுகளை நாகை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.செல்வராஜ் செய்ததோடு, அவரும் பங்கேற்று விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தினார்.