தமிழகம்

சென்னை | பேரணி செல்ல முயன்ற 300 வியாபாரிகள் கைது

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் லூலூ மார்க்கெட் திறக்கப்படுவதை கண்டித்து தலைமைச் செயலகம் நோக்கி பேரணியாக செல்ல முயன்ற 300 வியாபாரிகளை போலீஸார் கைது செய்தனர்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை, தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவை, தமிழ்நாடு அனைத்து வியாபாரிகள் சங்கங்களின் பேரமைப்பு ஆகியவை சார்பில் தமிழகத்தில் லூலூ மார்க்கெட் திறக்கப்படுவதை கண்டித்து தலைமைச் செயலகம் நோக்கி பேரணியாக செல்ல சென்னை சேப்பாக்கத்தில் ஏராளமான வியாபாரிகள் நேற்று கூடினர்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் தலைமையில் பேரணியாக செல்லமுயன்றவர்களை போலீஸார் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் அருகில் தடுத்து நிறுத்தினர். தடையை மீறி செல்ல முயன்றவர்கள் கைது செய்யப்பட்டனர்.

பின்னர் வெள்ளையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: லூலூ மார்க்கெட்டால் சில்லறை வணிகம் பாதிக்கப்படும் என்பதால், அதை தொடர்ந்து எதிர்த்து வருகிறோம். இதை கோவையில் முதல்வர் ஸ்டாலின்தான் திறந்துவைத்தார். வெளிநாட்டு உற்பத்தி பொருட்கள் நமக்கு தேவையில்லை.

உள்நாட்டுதயாரிப்புகளை பயன்படுத்தினாலே போதும். முதலில் லூலூ மார்க்கெட் குறைந்த விலையில் பொருட்களை கொடுப்பது போன்றுதோன்றும். அதனால் பாதிக்கப்பட்டு சிறு வணிகர்கள் தங்கள் கடைகளை மூடிய பிறகு, பொருட்களுக்கு லூலூ மார்க்கெட் வைப்பதுதான் விலை.

இதை கருத்தில் கொண்டேலூலூ மார்க்கெட் போன்ற பெருவணிக நிறுவனங்களை எதிர்த்து வருகிறோம். எங்கள் போராட்டம் தொடரும் என்றார்.

SCROLL FOR NEXT