வெண்புள்ளிகள் விழிப்புணர்வு இயக்கம் சார்பில் தாம்பரத்தில் இலவச சித்த மருத்துவம் முகாம் நடைபெற்றது.
மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமம் மற்றும் வெண்புள்ளிகள் விழிப்புணர்வு இயக்கமும் இணைந்து வெண்புள்ளிகளுக்கு இலவச சித்த மருத்துவ முகாம் தாம்பரத்தில் தேசிய கரோடியா மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. முகாமிற்கு வெண்புள்ளிகள் விழிப்புணர்வு இயக்கத்தின் செயலாளர் கே.உமாபதி தலைமை தாங்கினார்.
மருத்துவ முகாமை மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமத்தின் டைரக்டர் ஜெனரல் பேராசிரியர் மருத்துவர் ஆர்.எஸ்.ராமசாமி தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசும்போது, “இது தொற்று வியாதி அல்ல. இந்த நோயை முறையாக சித்த மருந்துவம் மூலம் குணப்படுத்தலாம்.
வெண்புள்ளிகள் விழிப்புணர்வு இயக்கத்துடன் இணைந்து தமிழக மற்றும் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு மற்றும் மருத்துவ முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. வெண்புள்ளிகள் தொடர்பாக எந்த அமைப்புகளுடனும் இணைந்து விழிப்புணர்வு மற்றும் சிகிச்சை அளிக்க தயாராக இருக்கிறோம்” என்றார்.
வெண்புள்ளிகள் விழிப்புணர்வு இயக்கத்தின் செயலாளர் கே உமாபதி பேசும்போது, “வெண்புள்ளி பாதிப்பு என்பது ஒரு நோயே கிடையாது. இது யாரிடமிருந்தும் யாருக்கும் தொற்றாது. பரம்பரை பாதிப்பும் கிடையாது. அதனால் வெண்புள்ளியால் பாதிக்கப்பட்ட யாரும் கவலைப்பட வேண்டியதில்லை. தமிழகம் முழுவதும், பல்வேறு விழிப்புணர்வு நடத்தியுள்ளோம். தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம் என்றார்.
இந்த முகாமில் வெண்புள்ளிகளால் பாதிக்கப்பட்ட பலர் பங்கேற்று சிகிச்சையும் ஆலோசனை யும் பெற்றுச் சென்றனர். மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டன. 044-22265507 / 22265508 ஆகிய தொலைப்பேசி எண்களிலோ அல்லது 9840052464 என்ற செல்போன் எண்ணிலோ தொடர்பு கொண்டு மேலும் பல விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம்.