‘நமக்கும் ஒருநாள் வெற்றி கிடைக்கும்’ என்று திருநெல்வேலியில் நடைபெற்ற தொண்டர்களுடனான சந்திப்பில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசினார்.
மக்களவைத் தேர்தல் தோல்வியால், தொண்டர்கள் சோர்ந்துவிடக் கூடாது என்பதற்காக, மாவட்டம்தோறும் ‘கழக ஆய்வுக் களம்’என்ற பெயரில், வைகோ தொண்டர்களைச் சந்திக்கத் தொடங்கியுள்ளார்.
அதன்படி, திருநெல்வேலியில் இந்த ஆய்வுக்களத்தின் தொடக்க நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது. தங்கும் விடுதியொன்றில் தொண்டர்களைச் சந்தித்து அவர்களுடன் வைகோ உரையாடினார்.
மாற்றம் வரும்
திருநெல்வேலி புறநகர் மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்களை காலையில் சந்தித்து பேசிய வைகோ, மாலையில் மாநகர் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களைச் சந்தித்தார்.
தொண்டர்கள் மத்தியில் வைகோ பேசும்போது, ‘தேர்தல் தோல்வி குறித்து கவலை இல்லை. நமக்கு என்றாவது ஒருநாள் வெற்றி கிடைக்கும். இவ்வளவு தோல்விகளுக்குப் பின்னரும் இந்த இயக்கத்திலிருந்து யாரும் வெளியேறாமல் இருப்பதே பெரும் வெற்றியாகும். மக்களவைத் தேர்தலில் பண ஆதிக்கத்தால் வெற்றி பெறப்பட்டிருக்கிறது. இது நீண்ட நாள் நிலைக்காது. மக்கள் மனதில் மாற்றம் வரும்’ என்றார்.
கட்சியின் வளர்ச்சிப் பணிகள், எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் தொண்டர்களிடம் வைகோ கருத்துகள் கேட்டறிந்தார்.
ஜூலை 5-ம் தேதி விருதுநகர் மாவட்டத்திலும், 8-ம் தேதி காஞ்சிபுரம் மாவட்டத்திலும் ஆய்வுக் களம் நடைபெறவுள்ளது.