மதுரை: தற்போது அரசின் பிரம்மாண்ட கட்டிடங்கள், மேம்பாலங்கள், குடியிருப்புச் சாலைகள் வரை அனைத்து கட்டுமானப் பணிகளையும் தனியார் நிறுவனங்களே ஒப்பந்தப்புள்ளி கோரி பணிகளை எடுத்து செய்து வருகின்றன.
அரசு ஒப்பந்தப்புள்ளி கோரி பணிகளை மேற்பார்வையிட்டு வருகிறது. ஆனால், கடந்த கால் நூற்றாண்டுக்கு முன்பு செயல்பட்ட அரசு கட்டுமானக் கழகம் தனியார் போல பல்வேறு பணிகளை ஒப்பந்தப்புள்ளி கோரி சிறப்பாகச் செய்துள்ளது. அவர்கள் அப்போது கட்டிய பல்வேறு கட்டிடங்கள் தமிழகத்தில் கம்பீரமாக நிற்கின்றன.
ஆனால், அந்த கட்டுமானக் கழகம் தற்போது தனியாருடன் போட்டியிட முடியாமல் முடங்கி விட்டது. தமிழ்நாடு அரசு கட்டுமானக் கழகம் 1980 பிப்ரவரி 8-ம் தேதி முதல்வராக இருந்த எம்ஜிஆரால் உருவாக்கப்பட்டது. மதுரை சொக்கிகுளத்தில் டிவிஎஸ் பங்களா அருகில் இதன் அலுவலகம் தொடங்கப்பட்டது. அந்தக் காலக்கட்டத்தில் தனியார் ஒப்பந்ததாரர்களோடு, தமிழ்நாடு அரசு கட்டுமானக் கழகமும் ஒப்பந்தப் புள்ளிகளில் கலந்து கொண்டு ஒப்பந்தம் எடுத்து பல்வேறு கட்டிடங்களைக் கட்டி யுள்ளது.
கட்டுமானக் கழகத்தின் கட்டுமானப் பணிகள் நின்றுவிட்ட நிலையில் அந்த கழகத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற அதிகாரிகள், ஊழியர்கள், மதுரையில் சந்தித்துக் கொண்டனர். இந்தச் சந்திப்பு நெடுஞ்சாலை துறை ஓய்வு ஊழியர்கள் சங்கத்தில் நடந்தது. சந்திப்பின்போது தங்கள் பணிக்காலத்தில் தனியாரே விஞ்சும் வகையில் மேற்கொண்ட பணி களை பற்றி பேசி சிலாகித்தனர்.
1980 காலகட்டத்தில் மதுரையில் ஒன்றாகப் பணிபுரிந்துள்ளனர். இந்தத் துறையின் செயல்பாடு முடங்கியபோது பலர் விருப்ப ஓய்வு பெற்றனர். பலர் ஓய்வுபெற்றனர். அதேநேரத்தில் இன்று தனியார் ஒப்பந்தம் எடுத்துச் செய்யும் பணிகளின் தரம் என்பது கவலைக்குரியதுதான்.
இது குறித்து அரசு கட்டுமானக் கழகத்தில் தேர்வுநிலை உதவியாளராக பணிபுரிந்த கஸ்தூரி கூறியதாவது: மதுரையில் உலக தமிழ் மாநாடு நடந்தபோது பல சாலைகள், கழிவு நீர் வாய்க்கால் திட்டம், தமிழ்நாடு அரசு கட்டுமானக் கழகத்தால் மேற்கொள்ளப்பட்டது. மதுரை தமுக்கம் மைதானத்தில் 1981-ல் உலகத் தமிழ்ச் சங்க மாநாட்டையொட்டி தமிழ்நாடு அரசு கட்டுமானக் கழகத்தால் அமைக்கப்பட்ட தமிழ் அன்னை சிலையை அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி திறந்து வைத்தார்.
காலப்போக்கில் கட்டுமானக் கழகத்தில் தொழிலாளர் பற்றாக்குறை, அரசியல் அழுத்தம் போன்ற பல்வேறு காரணங்களால் அரசுப் பணிகளை ஒப்பந்தம் எடுத்தாலும் நேரடியாகப் பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. அதனால், அரசு கட்டுமானக் கழகம் அப்பணிகளை தனியாருக்கு சப்-கான்ட்ராக்ட் விட்டு பணிகளைத் தரமாக மேற்கொண்டது.
அந்த அடிப்படையில் கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை, மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் ஆகியன தமிழ்நாடு அரசு கட்டுமானக் கழகம் எடுத்துச்செய்த பணிகள்தான். தஞ்சாவூரில் நடந்த உலக தமிழ் மாநாடு வேலையை அரசு கட்டுமானக் கழகமே முன்னின்று செய்தது. காட்பாடி வெடிமருந்து ஆலை, கரூர் அமராவதி பாலம், வண்டலூர் உயிரியல் பூங்கா, மதுரை வணிக வரித்துறை அலுவலகம் போன்றவை கட்டுமானக் கழகம் செய்த முக்கியப் பணிகள்.
பின்னர் அரசு கட்டு மானக் கழகத்துக்குப் போதுமான வேலை கிடைக்காததால் அங்கு பணியாற்றியோருக்கு அரசால் ஊதியம் வழங்க முடியவில்லை. அதனால், அதில் பணியாற்றிய பலர் அரசின் பிற துறைகளுக்குப் பணிமாற்றம் செய்யப்பட்டனர். ஆனால், அந்தப் பணி மாற்றம் பிடிக்காமல் பல ஊழியர்கள் விருப்ப ஓய்வில் சென்றனர்.
இப்படி ஒரு காலத்தில் கட்டுமானத் துறையில் தனியாரை விஞ்சும் அளவுக்கு கோலோச்சிய அரசு கட்டுமானக் கழகம் முடங்கிவிட்டது. தற்போது முழுக்க முழுக்க தனியாரே ஒப்பந்தம் எடுத்து ஆதிக்கம் செலுத்தும் துறையாக கட்டுமானத் துறை மாறி விட்டது. இவ்வாறு அவர் கூறினார்.