மேட்டூர்: மேட்டூர் அருகே பராமரிப்பு இல்லாத குண்டும், குழியுமான சாலையால் மக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.
சேலம் மாவட்டம் நங்கவள்ளி வட்டாரத்துக்கு உட்பட்ட பகுதியில் வீரக்கல் கிராமம் உள்ளது. இப்பகுதியிலிருந்து கோம்புரான்காடு வழியாக கருமலைக்கூடல், மேட்டூருக்கு செல்ல கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தார் சாலை அமைக்கப்பட்டது. இச்சாலையில் பேருந்துகள் செல்வதில்லை. இரு சக்கர வாகனம், காய்கறி வாகனங்கள், டிராக்டர், உள்ளிட்டவை சென்று வருகின்றன.
இச்சாலை வழியாக பல்வேறு கிராம மக்களும் மேட்டூர், கருமலைக்கூடலுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில், சாலையில் பல்வேறு இடங்கள் சேதமாகி குண்டும், குழியுமாக மாறியுள்ளதால் வாகன ஓட்டிகள், நடந்து செல்வோர் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக, முதியோர், பெண்கள் அவதிப்படுகின்றனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: வீரக்கல்லில் இருந்து கோம்புரான்காடு வழியாக கருமலைக்கூடல் செல்ல கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தார்சாலை அமைக்கப்பட்டது. பின்னர் பராமரிப்பு இல்லாததால், ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக மாறியுள்ளது. இதனால், மழைக் காலங்களில் சாலை சேறும், சகதியுமாக மாறிவிடுவதால், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்தை சந்திக்கின்றனர்.
இரவு நேரங்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் சாலை பள்ளங்களில் நிலை தடுமாறி கீழே விழுந்து காயங்களுடன் வீட்டுக்கு செல்கின்றனர். மேலும், விபத்தில் சிக்குவோர், உடல் நலம் பாதிக்கப்படும் முதியவர்கள், நோயாளிகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களை மருத்துவச் சிகிச்சைக்கு குறிப்பிட்ட நேரத்தில் அழைத்து செல்ல முடியாத நிலை உள்ளது.
அவசர காலத்தில் ஆம்புலன்ஸ் வாகனம் கூட கிராமங்களுக்கு வருவதில் காலதாமதம் ஏற்படுகிறது. புதிய தார் சாலை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.