தமிழகம்

மதுரை - செங்கோட்டை இரவு நேர ரயில் இயக்கப்படுமா?

செய்திப்பிரிவு

மதுரை: மதுரை - செங்கோட்டை இடையே தினமும் 2 அதிவிரைவு ரயில்களும், 3 சிறப்புக் கட்டண ரயில்களும் (சாதாரண பயணிகள் ரயில்) இயக்கப்பட்டு வருகின்றன.

குற்றால சீசன் தொடங்கியுள்ளதாலும், இத்தடத்தில் சாலை வழியாகச் செல்வதைவிட குறைந்த நேரத்தில் ரயிலில் சென்றுவிட முடிவதாலும் இவ்வழியாகச் செல்லும் ரயில்களில் புறப்படும் இடங்களிலேயே கூட்டம் நிரம்பி விடுகிறது. பயணிகளின் தேவையைக் கருத்தில் கொண்டு மதுரை - செங்கோட்டை இடையே இரவு நேர ரயில்களை இயக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

இது குறித்து, “இந்து தமிழ் திசை” உங்கள் குரல் சேவையில் தொடர்பு கொண்ட திருமங்கலத்தைச் சேர்ந்த சிவகுமார் கூறியதாவது: மதுரையிலிருந்து செங்கோட்டைக்கு தினமும் காலை 7.10, 11.30 மற்றும் மாலை 5.15 மணிக்கு பயணிகள் ரயில் இயக்கப்படுகிறது. மறுமார்க்கத்தில் செங்கோட்டையிலிருந்து காலை 7, 12.10 மற்றும் பிற்பகல் 3.05 மணிக்கு மதுரைக்கு இயக்கப்படுகிறது.

வழக்கமாகவே இந்த ரயில்களில் மதுரை, சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் செல்லும் பயணிகள் கூட்டம் அதிகமாகக் காணப்படும். தற்போது குற்றால சீசன் தொடங்கி யுள்ளதால் பெரும்பாலான பயணிகள் நின்றுகொண்டும், ஆபத்தான முறையில் படிகளில் அமர்ந்து கொண்டும் பயணிக்கின்றனர்.

அதிலும் செங்கோட்டையிலிருந்து காலை 7 மணிக்கு மதுரைக்கும், மதுரையிலிருந்து மாலை 5.15 மணிக்கு செங் கோட்டைக்கும் இயக்கப்பட்ட பயணிகள் ரயில் தற்போது மயிலாடுதுறை வரை நீட்டிப்புச் செய்யப்பட்டுள்ளது. இதனால் மாலை நேர ரயிலில் மதுரை சந்திப்பில் ஏறுபவர்களுக்குக் கூட இடமில்லை. இதனால் அந்த ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்கும்படி வைக்கப்பட்ட கோரிக்கை யையும் ரயில்வே நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை.

கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, இரவு நேரத்தில் புறப்படும் வகையில் கூடுதலாக ஒரு பயணிகள் ரயிலை இத்தடத்தில் இயக்க வேண்டும். ஏனெனில் மாலை 5.15 மணிக்குப் பிறகு மதுரை - செங்கோட்டை மார்க்கத்தில் பயணிகள் ரயில் எதுவும் இல்லை. குற்றால சீசனை பொருத்தவரை இரவு நேர தட்ப வெப்ப நிலையை அனுபவிக்க சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் சென்று வருவது வழக்கம் எனவே, இரவு 9 அல்லது 10 மணிக்குப் புறப்படும் வகையில் இரு மார்க்கங்களிலும் தினசரி பயணிகள் ரயில் இயக்க முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT