சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில், மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம், கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நேற்று நடந்தது படம்: ம.பிரபு 
தமிழகம்

மக்களவைத் தேர்தல் கூட்டணி குறித்து விரைவில் அறிவிப்பு - தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தகவல்

செய்திப்பிரிவு

சென்னை: மக்களவைத் தேர்தல் கூட்டணி குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.

தேமுதிக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம், சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் பார்த்தசாரதி மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வைத்தனர்.

இதில், கட்சியின் வளர்ச்சிப் பணிகள், புதிய உறுப்பினர் சேர்க்கை, மக்களவைத் தேர்தல் கூட்டணி உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஆக. 25-ம்தேதி விஜயகாந்த் பிறந்த நாளை வறுமை ஒழிப்பு தினமாகக் கொண்டாடுவது என முடிவு செய்யப் பட்டது.

மணிப்பூரில் பழங்குடியின பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில், குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும்.

கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் உரிய நீரைப்பெற்றுத் தர வேண்டும். விலைவாசிஉயர்வு, கனிமவளக் கொள்ளையைக் கட்டுப்படுத்த வேண்டும். அனைத்து மகளிருக்கும் உரிமைத்தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளைவலியுறுத்தி கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பிரேமலதா விஜயகாந்த் கூறியதாவது: தேமுதிக தற்போது வரை யாருடனும் கூட்டணியில் இல்லை. மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக, கட்சித் தலைவர் விஜயகாந்த் விரைவில் அறிவிப்பார்.

திமுக, அதிமுகவில் இருந்து இதுவரை வெற்றி பெற்ற எம்.பி.க்கள், தமிழக நலனுக்காக இதுவரை செய்தது என்ன? திமுக அரசு தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.

டெல்டா பகுதிகளுக்குத் தேவையான நீரை தமிழக அரசால் பெற்றுத்தர முடியவில்லை. நீரின்றி பல்வேறு பகுதிகளும் வறண்டு காணப்படுகின்றன. வருங்காலத்தில் நிலைமை இதைவிட மோசமானதாக இருக்கும். எனவே, பிறர் மீது பழி சுமத்தி, பிரச்சினையிலிருந்து தப்ப முயற்சிப்பதை விடுத்து, மக்கள் பிரச்சினைகளுக்கு தமிழக அரசு தீர்வுகாண வேண்டும்.

முதல்வர் ஸ்டாலினுடன் நான் தொலைபேசியில் பேசியதாக சிலவதந்திகள் பரவுகின்றன. மறைமுகமாக கூட்டணி குறித்து பேசும் பழக்கம் தேமுதிகவுக்கு கிடையாது. லஞ்சம், ஊழலில் கைது செய்யப்பட்டவர்கள் அமைச்சர் பதவியில்இருந்து உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் தொடர்வது தவறான முன்னுதாரணம்.

நடிகர் விஜய், மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை கொடுத்து ஊக்குவிப்பதும், பயிலகம் தொடங்கியிருப்பதும் நல்ல விஷயம். விஜயகாந்த் வழியில் மக்களுக்கு நல்லது செய்தால், அதை வரவேற்கிறோம். இவ்வாறு பிரேமலதா கூறினார்.

SCROLL FOR NEXT