உதகை: கூடலூர், பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், ஆங்காங்கே மரங்கள் விழுந்து தமிழக - கேரள வழித்தடத்தில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதுடன், வீடு சீரமைப்பு பணியின்போது இடிபாடுகளில் சிக்கி இருவர் காயமடைந்தனர்.
நீலகிரி மாவட்டம் உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த சில நாட்களாக சூறாவளிக் காற்று வீசியதால் மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனால், போக்குவரத்து தடைப்பட்டதுடன், நீர் மற்றும் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று காற்றின் தீவிரம் சற்று குறைந்திருந்தது.
உதகையிலிருந்து பார்சன்ஸ்வேலி செல்லும் சாலை கவர்னர்சோலை பகுதியில் நேற்று காலை மரம் விழுந்ததால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தீயணைப்புத் துறையினர் சென்று மரத்தை வெட்டி அகற்றிய பிறகு போக்குவரத்து சீரானது. கூடலூரில் இருந்து கேரள மாநிலம் வயநாட்டுக்கு செல்லும் மலைப் பாதை நெலாக்கோட்டை அருகே கூவச்சோலை பகுதியில் கனமழையால் சாலையின் குறுக்கே மூங்கில் தூர் பெயர்ந்து விழுந்தது.
இதனால், அவ்வழியாக போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. கூடலூர் தீயணைப்புத் துறையினர் மீட்பு உபகரணங்களுடன் விரைந்து சென்று, நெடுஞ்சாலைத் துறையின் பொக்லைன் இயந்திரம் உதவியுடன் மூங்கில் தூர்களை அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர். இதனால், அந்த சாலையில் சுமார் இரண்டரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கூடலூர் நகர் காசிம்வயல் பகுதியில் மொய்தீன் என்பவர் தனக்கு சொந்தமான பழைய வீட்டை தொழிலாளர்கள் உதவியுடன் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, திடீரென வீட்டின் ஒரு பக்க சுவர் இடிந்து விழுந்தது. இதில் தொழிலாளர்கள் சசிகுமார் (50), பாபு (30) ஆகியோர் இடிபாடுகளில் சிக்கினர்.
அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து இருவரையும் மீட்டு, கூடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். வட்டாட்சியர் ராஜேஸ்வரி உட்பட வருவாய் துறையினர் சென்று பார்வையிட்டனர். அதைத்தொடர்ந்து, அந்த பணியை உடனடியாக நிறுத்த உத்தரவிட்டனர்.
அவலாஞ்சியில் 102 மி.மீ.: நீலகிரி மாவட்டத்தில் நேற்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக அவலாஞ்சியில் 102 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. சேரங்கோடு - 94, நடுவட்டம் - 87, பந்தலூர் - 82, அப்பர் பவானி - 72, கூடலூர் - 60, ஓவேலி - 56, செருமுள்ளி - 58, பாடந் தொரை - 55, தேவாலா - 46, கோடநாடு - 17, கிளன்மார்கன் - 14, கேத்தி - 13, கல்லட்டி - 13, மசினகுடி - 11, உதகை - 10, பாலகொலா - 10, குன்னூர் - 6 மில்லி மீட்டர் மழை பதிவானது.