ஈரோடு: அடுத்த ஆண்டு பொங்கலுக்கான இலவச வேட்டி சேலைகளை, உரிய நேரத்தில் வழங்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கைத்தறித் துறை அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டம், சித்தோடு, ஈரோடு அரசு பொறியியல் கல்லூரியில், மாணவ, மாணவிகளிடையே கதர் மற்றும் கைத் தறி ரகங்களை பிரபலப்படுத்தும் திட்டத்தினை வீட்டு வசதித் துறை அமைச்சர் சு.முத்துசாமி, கைத்தறித் துறை அமைச்சர் ஆர். காந்தி ஆகியோர் தொடங்கிவைத்தனர்.
இதனைத் தொடர்ந்து அசோகபுரம் பகுதியில் செயல்படும் தமிழ்நாடு கூட்டுறவு துணிநூல் பதனிடும் ஆலையில் ரூ.1.53 கோடி மதிப்பீட்டில் புதிய ஸ்டென்டர் இயந்திரத்தின் சேவையை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர். மருத்துவ முகாம்: பவானி கூடுதுறையில் ரோட்டரி ஹால் திருமண மண்டபத்தில், பொது சுகாதாரம் மற்றும் பவானி அரசு சித்த மருத்துவமனை சார்பில் நடந்த நெசவாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமினை அமைச்சர்கள் பார்வையிட்டனர்.
பவானி அரசு சித்த மருத்துவர் கண்ணுசாமி தலைமையிலான மருத்துவக் குழுவினர், மூலிகை மருத்துவம் மற்றும் பாரம்பரிய சிறு தானியங்கள் குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு விளக்கம் அளித்தனர்.
இந்நிகழ்வில் பங்கேற்ற கைத்தறித்துறை அமைச்சர் காந்தி கூறியதாவது: இலவச வேட்டி சேலை உற்பத்திக்கான நூல் விநியோகம் ஆகஸ்ட் முதல் வாரத்தில் தொடங்கும். இந்த ஆண்டு டிசம்பர் 15-ம் தேதிக்குள் இலவச வேட்டி சேலை பணிகள் முடிக்கப்பட்டு, ஜனவரி 2-ம் தேதி முதல் விநியோகப் பணிகள் தொடங்கும். பொங்கலுக்கு முன்பாக தகுதியான அனைவருக்கும் இலவச வேட்டி, சேலை வழங்கப்படும்.
கைத்தறி ரகங்கள் விசைத்தறியில் நெய்யப்படுவதைத் தடுக்க, அதிகாரிகள் ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆட்சியில் கூட்டுறவு சங்கங்களில் வைத்திருந்த ரூ.148 கோடி நிலுவை கடனை அடைத்துள்ளோம். நெசவு தொழிலில் ஈடுபடும் இளைஞர்களை ஊக்குவிக்க, 10 சதவீத கூலி உயர்வு வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கைத்தறித் துறை செயலாளர் தர்மேந்திர பிரதாப், துணி நூல் துறை ஆணையர் மா.வள்ளலார், கோ- ஆப்டெக்டஸ் மேலாண் இயக்குநர் கே.விவேகானந்தன், ஈரோடு ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா உள்ளிட்ட அதிகாரிகள், எம்.எல்.ஏ.க்கள் ஈவிகேஎஸ் இளங்கோவன், ஏ.ஜி.வெங்கடாசலம், மேயர் சு.நாகரத்தினம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.