சேலம் கிச்சிப்பாளையம் களரம்பட்டி செல்லும் சாலையில் மழை நீருடன் சாக்கடை நீர் கலந்து சாலை சேறும் சகதியுமாக மாறியதால், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர். 
தமிழகம்

சேலத்தில் 2 நாட்களாக தொடர் மழை - தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கியதால் மக்கள் அவதி

செய்திப்பிரிவு

சேலம்: சேலத்தில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் மழையால் சாலை களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் அமைந்துள்ள சாலைகளில் தண்ணீர் தேங்கி நின்றதால் சேறும் சகதியுமாக மாறியுள்ளது.

சேலத்தில் நேற்று முன்தினம் காலை முதலே வானம் மேகமூட்டமாக இருந்த நிலையில், மாலையில் பெய்த மழை இரவு வரை தொடர்ந்தது. சேலம் மாநகரில் அம்மாப்பேட்டை, அஸ்தம்பட்டி, ஜங்ஷன், கொண்டலாம்பட்டி என அனைத்து பகுதிகளிலும் முன்தினம் மாலை 4 மணியளவில் பெய்யத் தொடங்கிய மழை நள்ளிரவு 1 மணி வரை நீடித்தது.

மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. சாக்கடை நீருடன் மழை நீரும் கலந்து சாலையில் ஓடியதால் பொது மக்கள் கடும் அவதி அடைந்தனர். கிச்சிப்பாளையம் சாலையில் சாக்கடை கழிவு நீருடன் மழை நீரும் அதிக அளவில் ஓடியதால் அந்த வழியாக வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் கடும் அவதி அடைந்தனர்.

நாராயண நகர், கருவாட்டு பாலம், சித்தேஸ்வரா, கருங்கல்பட்டி, களரம்பட்டி, குகை, தாதகாப்பட்டி, பழைய மற்றும் புதிய பேருந்து நிலையங்கள், காய்கறி மார்க்கெட் உள்பட பல பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. சேலம் புறநகர் மாவட்ட பகுதிகளான ஏற்காடு, பெத்தநாயக்கன் பாளையம், சங்ககிரி, தம்மம்பட்டி, ஆனைமடுவு உள்பட பல பகுதிகளிலும் கனமழை பெய்தது.

மழையால் தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது. மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். தொடர்ந்து நேற்று இரண்டாவது நாளாக மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்ததில் குளுமையான சீதோஷ்ண நிலை ஏற்பட்டது. ஏற்காட்டில் நேற்று முன்தினம் பகல் 2 மணிக்கு தொடங்கிய சாரல் மழை நள்ளிரவு 1.30 மணி வரை நீடித்தது.

வெளியூர் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து வந்துள்ள சுற்றுலாப் பயணிகள் சாரல் மழை, குளுமையான சீதோஷ்ணத்தை அனுபவித்து, காட்சி முனைகளுக்கு சென்று கண்டு ரசித்தனர்.

மாவட்டம் முழுவதும் பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்) : சேலம் 23.4, ஏற்காடு 6.4, பெத்தநாயக்கன் பாளையம் 5, சங்ககிரி, தம்மம்பட்டி, ஆனைமடுவு தலா 4, கெங்கவல்லி 3, ஓமலூர் 2.1, கரியகோவில் 2, ஆத்தூர் 1.8 என மாவட்டம் முழுவதும் மழை அளவு பதிவாகியுள்ளது.

SCROLL FOR NEXT