சென்னையில்: கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்துக்கு சென்னையில் முதல்கட்டமாக 1,727 சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில், விண்ணப்ப பதிவுக்கான சிறப்பு முகாம்களை 3 கட்டமாக நடத்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. அதன்படி மொத்தம் 1,428 ரேஷன் கடைகளில் முதல்கட்டமாக 703 கடைகளுக்கு நேற்றுமுதல் வரும் ஆக.4-ம் தேதி வரையில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.
அதைத் தொடர்ந்து 725 ரேஷன் கடைகளுக்கு ஆக. 5 முதல் 16-ம்தேதி வரையிலும், விடுபட்டவர்களுக்கு 17-ம் தேதி முதல் 28-ம்தேதி வரையில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளன. இதற்காக 2,266 பயோமெட்ரிக் கருவிகளும் தேவையான அளவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
முதல்கட்டமாக 703 நியாயவிலைக் கடைகளில் 500 குடும்ப அட்டைகளுக்கு ஒரு சிறப்பு முகாம் என்ற வகையில் 1,727 சிறப்பு முகாம்கள் ஏற்பாடுசெய்யப்பட்டு, நேற்று தொடங்கிவைக்கப்பட்டன. இந்த முகாம்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்ட 1,727 தன்னார்வலர்கள், 702 உதவி தன்னார்வலர்கள் மற்றும் 703 சிறப்பு முகாம் பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். இந்த பணிகளைக் கண்காணிக்க மண்டல வாரியாக 15 மண்டலங்களுக்கும் இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகளும் நியமிக்கப்பட்டிருந்தனர்.
1,515 போலீஸ் பாதுகாப்பு: அதேபோல் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில், முன்னெச்சரிக்கையாக 1,515 போலீஸாரும் காவலில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். மேலும் காவல்துறை சார்பில் 154 நகரும் குழுக்களும் அமைக்கப்பட்டிருந்தன. இந்த சிறப்பு முகாம்களையொட்டி கடந்த 23-ம் தேதி வரை சென்னையில் 5லட்சத்து 25 ஆயிரம் விண்ணப்பங்கள் வீடுவீடாக சென்று வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.