சென்னை: விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை குறைக்க போக்குவரத்து விதிமுறைகளை அரசு கண்டிப்புடன் நடைமுறைப்படுத்தி வருகிறது. குறிப்பாக சாலை விதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு உயர்த்தப்பட்ட அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்படுகிறது. இதன்படி ஹெல்மெட் அணியாமல் இருசக்கரம் வாகனம் ஓட்டுவது, பின்னால் அமர்ந்து பயணிப்பது, சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டுவது போன்ற விதிமீறல்களுக்கு ஆயிரம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்படுகிது.
சிக்னல் கோட்டை தாண்டினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படுகிறது. விதிமீறல் வாகன ஓட்டிகளை அடையாளம் காண சிக்னல்கள் தோறும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளதோடு, போக்குவரத்து போலீஸார் தங்களது செல்போனிலேயே படம் பிடித்து அபராதம் விதிப்பது, திடீரென பாய்ந்து வாகன ஓட்டிகளை மடக்கி பிடிப்பது போன்ற சம்பவங்களிலும் ஈடுபடுகின்றனர். விதிமீறல்களால் விலை மதிப்பற்ற உயிர்கள் பறிபோய் விடக்கூடாது என்பதற்காகவே இதுபோன்று கண்டிப்பு காட்டுவதாக போக்குவரத்து போலீஸார் கூறுகின்றனர்.
அதேநேரம் சென்னையில் பெரும்பாலான சாலைகள் சிதிலமடைந்து அதில் சிக்கும் வாகன ஓட்டிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக ஜெனரல் பீட்டர்ஸ் (ஜிபி ரோடு) சாலை குண்டும் குழியுமாக உள்ளது. அதே சாலையில் உள்ள தனியார் மால் எதிரேசாலை முற்றிலும் சேதம் அடைந்து வாகனங்கள் செல்லதகுதியற்ற நிலையில் உள்ளது.
இதனால், அந்த வழியாகவரும் வாகன ஓட்டிகள் சிரமத்தை சந்திக்கின்றனர். அங்கு டாஸ்டாக் கடைகளும் தொடர்ச்சியாக உள்ளதால் குடிமகன்கள் தங்களது வாகனங்களை சாலையைஆக்கிரமித்து நிறுத்தி விடுகின்றனர். இதனால், அப்பகுதிகளில் தினமும் இரட்டிப்பு நெரிசல் ஏற்படுகிறது.
அதைத் தொடர்ந்து ராயப்பேட்டை அரசு மருத்துவமனை அமைந்துள்ள வெஸ்ட் காட் சாலையின் நிலமையும்மோசம்தான். இதனால், விரைவாக வர வேண்டிய ஆம்புலன்ஸ்கள் இந்த சாலையில் தள்ளாடியபடியே வருகின்றன. அதைத் தொடர்ந்து வரும் ராயப்பேட்டை நெடுஞ்சாலை முற்றிலும் வாகனங்கள் செல்ல முடியாதவாறு பள்ளங்கள் நிறைந்து காணப்படுகின்றன.
ராயப்பேட்டை காவல் உதவி ஆணையர் அலுவலகம் முன்பு சாலை முற்றிலும் சிதிலமடைந்துள்ளதோடு பள்ளத்தை நிரப்புகிறோம் என்ற பெயரில் மாநகராட்சி ஊழியர்கள் அதில் சில கற்களை போட்டு மேடு பள்ளமாக மாற்றி வைத்துள்ளனர். இது ஆபத்தை மேலும் அதிகரித்துள்ளது.
அதோடு அவ்வை சண்முகம் சாலை சந்திப்பு, ராயப்பேட்டை மேம்பாலத்திலும் சாலைகள் சேதமடைந்துள்ளன. அதைத் தொடர்ந்து மயிலாப்பூர் ராமகிருஷ்ண மடம் சாலை முழுவதும் இதே நிலைதான். மேலும் சாலை நடுவே கழிவுநீர் கால்வாய் அடைப்பு மூடிகள் பள்ளமாகவும், மேடாகவும் உள்ளன. அதோடு சாலை குறுக்கே பல்வேறு இடங்களில் பள்ளங்கள் வெட்டப்பட்டு அவை மூடப்படாமல் வாகன ஓட்டிகளை நிலை குலைய வைக்கின்றன. பல்வேறு பணிகளுக்காக சதுரம், செவ்வகம், வட்ட வடிவங்களில் தோண்டப்பட்ட பள்ளங்கள் சரியாக மூடப்படாமல் உள்ளன.
வரும் மழைக் காலங்களில் இந்த சாலை நிலைமை மேலும் மோசமாகி வாகனங்கள் பள்ளத்தில் சிக்கி விபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இப்பகுதிகளில் சாலைகளால் வாகன ஓட்டிகள் குடும்பத்துடன் செல்லவே அச்சப்படுகின்றனர். 24 மணி நேரமும் பரபரப்பாக இயங்கும் ராயப்பேட்டை, மயிலாப்பூரின் முக்கிய சாலைகளே இதுதான் நிலைமை என்றால் உட்புறச் சாலைகளின் நிலமையை சொல்லவே வேண்டாம் என்கின்றனர் அப்பகுதி மக்கள். எத்தனையோ மேடு பள்ளம் வழியிலே.. உன்னை இடற வைத்து தள்ளப்பாக்கும் குழியிலே.. என்ற பாடல்தான் நினைவுக்கு வருவதாக பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து, இருசக்கர வாகன ஓட்டி நவீன் என்பவர் கூறும்போது, ‘ராயப்பேட்டை, மயிலாப்பூர் ஆகிய பகுதிகளில் உள்ள சாலை வழியாக வாகனத்தில் செல்வது அச்சம் நிறைந்ததாக உள்ளது. எப்போது, விபத்தில் சிக்குவோம் என தெரியாது. அந்த அளவுக்கு சாலைகள் படுமோசமாக உள்ளன. இனியும் மெத்தனம் காட்டாமல் சாலை சீரமைப்பை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது,‘சேதமடைந்த சாலைகளை கணக்கெடுத்து வருகிறோம்.விரைவில் சீரமைக்கப்படும்’ என்றனர். இதேபோல் போக்குவரத்து போலீஸாரிடம் கேட்டபோது,‘விதிமீறல் வாகன ஓட்டிகளிடம் அபராதம் வசூலிப்பதுமட்டுமே எங்கள் வேலை சாலைகளை சீரமைப்பு எங்கள் பணியல்ல’ எனக் கூறினர்