காற்று சாதகமாக குவிந்து மேகக்கூட்டங்களை சென்னை நோக்கி நகர்த்தினால் மட்டுமே சென்னையில் கனமழைக்கு வாய்ப்பிருக்கிறது என வானிலை ஆர்வலரும் பதிவருமான தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், "சென்னையில் இன்று பகல் நேரத்தில் விட்டுவிட்டு மழை பெய்யும். திருவள்ளூர் மாவட்டத்திலும் பகல் நேரத்தில் மழைக்கு வாய்ப்பிருக்கிறது. சென்னையில் மாலை அல்லது இரவு நேரத்தில் காற்று குவிதல் நிகழ வாய்ப்புள்ளது. காற்றின் போக்கு எப்படி இருக்கிறது என்பதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டியுள்ளது. அதனால், இப்போதே கனமழை எச்சரிக்கை தர விரும்பவில்லை.
காற்று சாதகமாக சென்னைக்கு மேல் குவிந்தால் நமக்கு கனமழை நிச்சயம். ஒருவேளை அது சற்றே வடக்கு நோக்கி நகர்ந்தால் நமக்கு கனமழை இருக்காது. இருப்பினும் மழை பெய்யும். காற்று எப்படி குவிகிறது என்பதை கண்காணித்து அடுத்த அறிக்கையை வெளியிடுகிறேன்.
கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் அதிகபட்சமாக எண்ணூர் துறைமுக பகுதியில் 107 மி.மீ மழை பதிவாகியுள்ளது.