தமிழகம்

மதுரையில் கட்டுமான பணியே தொடங்காத நிலையில் கோவையில் எய்ம்ஸ்-க்கு மத்திய அரசு அனுமதிக்குமா?

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: மதுரையில் எய்ம்ஸ் மருத்துவ மனை கட்டுமானப் பணிகள் இன்னும் தொடங்காத நிலையில், தற்போது மாநில அரசு கோவையில் எய்ம்ஸ் அமைக்க மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளதாக மாநில சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியிருப்பது சர்ச்சையை கிளப்பி உள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் 2019 ஜனவரி 27-ம் தேதி மதுரை தோப்பூரில் எய்ம்ஸுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். ஆனால், தற்போது வரை கட்டுமானப் பணிகள் தொடங்க வில்லை. மதுரை எய்ம்ஸ்-க்கு கடன் வழங்குவதாக ஒப்புதல் தெரிவித்த ஜப்பான் நாட்டின் ஜைக்கா நிறுவனமும் இதுவரை நிதி ஒதுக்கவில்லை.

மதுரை எய்ம்ஸ்-க்கான எம்பிபிஎஸ் வகுப்புகள் மட்டும் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி கட்டிடத்தில் நடக்கின்றன. தேர்தல் நேரத்தில் வாக்குறுதி அளித்தாலும், திமுக ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகளாகியும் தற்போது வரை எய்ம்ஸ் கட்டுமானப் பணி தொடங்கப்படவில்லை.

இது குறித்து நேற்று முன்தினம் மதுரை வந்த சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, ‘‘மத்திய அரசின் ஒருங்கிணைப்பில் குழப்பமும், போதிய கவனமும் செலுத்தாததால் மதுரை எய்ம்ஸ் தாமதமாகிறது.

கோவை வளர்ந்துவரும் நகரம், அதனால் கோவைக்கான எய்ம்ஸ் மருத்துவமனையை ஜைக்கா நிதி உதவியின்றி மத்திய அரசே நிதி ஒதுக்க மத்திய சுகாதார அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். மத்திய அரசின் நிதிப் பங்களிப்பில் ‘கோவை’ எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் நடைபெறும் என நம்புகிறோம்’’ என்றார்.

அமைச்சரின் இந்த பதிலால் மதுரை எய்ம்ஸ் தாமதத்துக்கு மத்திய, மாநில அரசுகள் இடையே நீடிக்கும் அரசியல் மோதலே காரணம் என்பது வெளிப் படையாகத் தெரியவந்துள்ளது. மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளை தொடங்க நடவடிக்கை எடுக்காமல் திடீரென கோவையில் எய்ம்ஸ் அமைக்க மத்திய அரசிடம் மாநில அரசு கோரிக்கை வைத்திருப்பதாக, சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

அதனால், தென் தமிழக மக்கள் பிரதிநிதிகள் கட்சி பாரபட்சமின்றி மதுரை எய்ம்ஸ்க்கு நிதி ஒதுக்கவும், கட்டுமானப் பணிகளை துரிதமாகத் தொடங்கவும் நடவடிக்கை எடுக்க குரல் கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால், இது குறித்து எய்ம்ஸ் வட்டாரத்தில் விசாரித்தபோது, கோவையில் எய்ம்ஸ் கொண்டு வருவதற்கான நடவடிக்கை தற் போது இல்லை என்றனர்.

SCROLL FOR NEXT