தமிழகம்

இலவசமாக சின்ன வெங்காய விதைகள்: உற்பத்தியை அதிகரிக்க தோட்டக்கலைத் துறை புது ஏற்பாடு

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

சின்ன வெங்காயம் கிலோ ரூ.120 வரை விற்பதால் அதன் சாகுபடி பரப்பை அதிகரிக்க அனைத்து மாவட்ட தோட்டக்கலைத் துறைக்கு தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்பி உத்தரவிட்டுள்ளது. அதற்காக இலவச விதை வெங்காயமும் அனுப்பி விவசாயிகளுக்கு வழங்க ஏற்பாடு செய்துள்ளது.

தமிழகத்தில் சின்ன வெங்காயம் விலை வரத்து குறைவால் ஒரு கிலோ ரூ.120 வரை விற்கிறது. அதனால், பொதுமக்கள் பெரும்பாலும் சின்ன வெங்காயம் வாங்குவதில்லை. அதற்கு பதிலாக மக்கள் பெரிய வெங்காயத்தை வாங்கி பயன்படுத்த பழகிவிட்டனர். கிட்டத்தட்ட கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக சின்ன வெங்காய விலை குறையாமல் இருப்பதால் தோட்டக்கலைத் துறையினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தற்போது மழை பெய்து வருவதால் சின்ன வெங்காயம் சாகுபடிக்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது. அதனால், தமிழக அரசு தற்போது அனைத்து மாவட்ட தோட்டக்கலைத்துறை இணை, துணை இயக்குநர்களுக்கு சின்ன வெங்காயம் சாகுபடியை அதிகரிக்க, தேவையான ஆலோசனை திட்டங்களை அனுப்பி வைக்குமாறு சுற்றறிக்கை அனுப்பி வைத்துள்ளது.

இதுகுறித்து மதுரை மாவட்ட தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் பூபதி கூறியதாவது:

திண்டுக்கல், சேலம், விழுப்புரம், ஈரோடு, பெரம்பலூர், அரியலூர், மதுரை மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் சின்ன வெங்காயம் அதிகமாக விளைவிக்கப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக பருவமழை பொய்த்துவிட்டதால் சின்ன வெங்காயம் சாகுபடி முற்றிலும் குறைந்தது.

சின்ன வெங்காயத்தை பொறுத்தவரையில் இயற்கையாகவே விளையும் விளைநிலங்களில் மட்டுமே சாகுபடி செய்யப்படும். மற்ற இடங்களில் சாகுபடி செய்தாலும் எளிதாக வராது. வழக்கமான சாகுபடி இடங்களிலும் சாகுபடியை மேலும் அதிகரிக்க நினைத்தால் மழை கைகூடவில்லை. அதனால், சாகுபடி பரப்பு குறைந்து உற்பத்தியில்லாமல் விலை உயர்ந்துகொண்டே செல்கிறது.

தற்போது வடகிழக்கு பருவமழை பெய்ய ஆரம்பித்துள்ளதால் தமிழக அரசு சின்ன வெங்காயம் சாகுபடியை அதிகரிக்க திட்டங்களை தயாரித்து அனுப்புமாறு தெரிவித்துள்ளது. மதுரை மாவட்டத்தில் டி.கல்லுப்பட்டி, திருமங்கலம், சேடபட்டி பகுதியில் சின்ன வெங்காயம் ஆயிரம் ஏக்கரில் நடக்கிறது. தற்போது 1,500 ஏக்கராக சின்ன வெங்காயம் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம், தேசிய தோட்டக்கலை திட்டத்தில், 400 ஹெக்டேருக்கான இலவசமாக விதை வெங்காயம் வாங்கி விவசாயிகளுக்கு கொடுத்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பூபதி மேலும் கூறியது: கடந்த ஆண்டுவரை விவசாயிகள், வெங்காயத்தை விதை வெங்காயமில்லாமல் வெங்காயத்தைப் பிரித்து பிரித்து நடுவர். இந்த ஆண்டு சின்ன வெங்காயத்துக்கென்று தனி விதைகளை மாவட்டத்தில் அறிமுகம் செய்துள்ளோம். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட வீரிய ஒட்டு ரகம் கோவை-5 மற்றும் டெய்லர் ஆகிய சின்ன வெங்காயம் விதை ரகங்களை பரிந்துரை செய்துள்ளோம். இதற்காக 600 கிலோ விதைகள் வாங்கி விவசாயிகளுக்கு இலவசமாக முழுமானியத்தில் விநியோகம் செய்துள்ளோம்.

அதனால், இன்னும் ஒரு சில மாதங்களில் 1,500 ஏக்கரில் சின்ன வெங்காயம் உற்பத்தியாக வாய்ப்புள்ளது. இதேபோல், தமிழகம் முழுவதும் சின்ன வெங்காயம் உற்பத்தியானால் வரத்து அதிகரித்து விலை குறையும். ஒரு ஹெக்டேருக்கு 8 கிலோ விதை வெங்காயம் போதும். சின்ன வெங்காயம் அதிகமாக உற்பத்தியானால் விலை குறையும் என அச்சப்படத் தேவையில்லை. அதற்காக சின்ன வெங்காயத்தை சேமித்து வைத்து விற்க சேமிப்பு கிடங்குகள் ஏற்பாடு செய்துள் ளோம் என்றார்.

SCROLL FOR NEXT