தமிழகம்

ஆர்.கே.நகரில் மீண்டும் மருதுகணேஷை நிறுத்த திமுக முடிவு: திமுக நிர்வாகிகளுடன் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்

செய்திப்பிரிவு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மீண்டும் என்.மருதுகணேஷை வேட்பாளராக நிறுத்த திமுக முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு காலியான ஆர்.கே.நகர் தொகுதியில் கடந்த ஏப்ரல் 12-ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டது. பணப்பட்டுவாடா உள்ளிட்ட முறைகேடுகள் காரணமாக வாக்குப் பதிவுக்கு 2 நாள்கள் முன்பாக தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் வரும் டிசம்பர் 21-ம் தேதி ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 27-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கவுள்ள நிலையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தொடர்பான பணிகள் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. கடந்த ஏப்ரலில் நடைபெற்ற இடைத்தேர்தலில் திமுக சார்பில் அக்கட்சியின் ஆர்.கே.நகர் கிழக்குப் பகுதி செயலாளரும், பத்திரிகையாளருமான என்.மருதுகணேஷ் அறிவிக்கப்பட்டார். அவருக்கு காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.

அவருக்காக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுச்செயலாளர் க.அன்பழகன், மாநிலங்களவை திமுக குழுத் தலைவர் கனிமொழி உள்ளிட்டோர் பிரச்சாரம் செய்தனர். தமிழகம் முழுவதும் இருந்து திமுக மாவட்டச் செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்களும் வீடு, வீடாகச் சென்று பிரச்சாரம் செய்தனர். கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்ட பிரச்சாரப் பொதுக்கூட்டமும் நடைபெற்றது. மருதுகணேஷ் ஆர்.கே.நகரிலேயே பிறந்து வளர்ந்தவர் என்பதாலும், அப்பகுதியிலேயே பத்திரிகையாளராக இருந்தவர் என்பதாலும் நடந்தே தொகுதி முழுவதும் வலம் வந்தார்.

எனவே, இந்த முறையும் அவரையே வேட்பாளராக நிறுத்த ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. தொண்டையில் ஏற்பட்ட தொற்று காரணமாக மருத்துவரிடம் சிகிச்சை பெற்ற ஆழ்வார்பேட்டையில் உள்ள வீட்டில் ஸ்டாலின் ஓய்வெடுத்து வருகிறார். ஆனாலும், நேற்று திமுக மாவட்டச் செயலாளர்கள் மாதவரம் சுதர்சனம் (சென்னை வடக்கு), பி.கே.சேகர்பாபு (சென்னை கிழக்கு), மா.சுப்பிரமணியன் (சென்னை தெற்கு), ஜெ.அன்பழகன் (சென்னை மேற்கு) மற்றும் சென்னை மாநகர் தொகுதிகளைச் சேர்ந்த திமுக எம்.எல்.ஏ.க்கள் ஸ்டாலினை சந்தித்தனர்.

கடந்த ஏப்ரலில் திட்டமிட்டபடி வாக்குச் சாவடி வாரியாக தேர்தல் பணிக் குழுக்களை அமைப்பது, தமிழகம் முழுவதும் உள்ள திமுக நிர்வாகிகளை தேர்தல் பணிகளில் ஈடுபடுத்துவது, வீடு, வீடாகப் பிரச்சாரம் செய்வது, வரும் 28-ம் தேதி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம் என்பதால் அதிமுகவினர் போலி வாக்காளர்களை சேர்க்காமல் தடுப்பது, திமுக ஆதரவாளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பது, முகநூல், வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடகங்களை தேர்தல் பிரச்சாரத்துக்கு பயன்படுத்துவது ஆகியவை குறித்து அவர்கள் ஆலோசித்துள்ளனர்.

கடந்த ஏப்ரலில் சென்னை வடக்கு மாவட்டச் செயலாளர் மாதவரம் சுதர்சனம் தலைமையில் தேர்தல் பணிகள் நடந்தன. மீண்டும் அவரது தலைமையில் தேர்தல் பணிக்குழுவை அமைக்கவும், தேர்தல் பணிகளுக்கு அனைத்து மாவட்டச் செயலாளர்களிடம் இருந்தும் நிதி திரட்டவும் ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

உடல்நலக் குறைவால் ஓய்வெடுத்து வரும் ஸ்டாலின் இன்று (நவம்பர் 25) திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் வர இருப்பதாகவும், அப்போது நிர்வாகிகளுடன் ஆலோசித்து ஓரிரு நாளில் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்றும் திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

காங்கிரஸ், முஸ்லிம் லீக் ஆதரவு:

இந்நிலையில் திமுகவுக்கு காங்கிரஸ் முஸ்லிம் லீக் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசரிடம் கேட்டபோது, 2016 பொதுத்தேர்தல், ஏப்ரலில் அறிவிக்கப்பட்ட இடைத்தேர்தலில் ஆர்.கே.நகரில் கூட்டணி கட்சியான திமுக போட்டியிட்டது. அதுபோல தற்போதும் திமுக போட்டியிடும். திமுக வேட்பாளரின் வெற்றிக்காக காங்கிரஸ் பாடுபடும். திமுக மகத்தான வெற்றி பெறும் என்றார்.

ஆர்.கே.நகரில் திமுக வேட்பாளரின் வெற்றிக்கு உழைப்போம் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அகில இந்தியத் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT