சென்னை: சிங்கப்பூரின் டிஎஸ்-சார் உட்பட 7 செயற்கைக்கோள்களுடன், பிஎஸ்எல்வி சி-56 ராக்கெட் அடுத்த வாரம் விண்ணில் ஏவப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தகவல் தொடர்பு, தொலையுணர்வு மற்றும் வழிகாட்டு செயற்கைக்கோள்களை, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) விண்ணில் நிலைநிறுத்தி வருகிறது. அதனுடன், வணிக ரீதியாகவும் வெளிநாட்டு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துகிறது.
அதன்படி, சிங்கப்பூருக்குச் சொந்தமான டிஎஸ்-சார் எனும் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை விண்ணில் ஏவுவதற்கு இஸ்ரோவின் என்எஸ்ஐஎல் (Newspace India Limited) நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
இந்த செயற்கைக்கோளை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள முதல் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி-56 ராக்கெட் மூலம் ஜூலை 30-ம் தேதி காலை 6 மணியளவில் விண்ணில் செலுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகளில் விஞ்ஞானிகள் தற்போது ஈடுபட்டுள்ளனர்.
இதில், முதன்மை செயற்கைக்கோளான டிஎஸ்-சார் செயற்கைக்கோள் 352 கிலோ எடை கொண்டது. இது சிந்தடிக் அப்ரேச்சர் ரேடார் தொழில்நுட்பத்தில் செயல்படக்கூடியது. இரவு, பகல் என அனைத்து பருவநிலையிலும் துல்லியமான படங்களை எடுத்து வழங்கும். இதனுடன் வெலாக்ஸ்-ஏஎம் (23 கிலோ), ஆர்கேட் (24 கிலோ) உட்பட 6 சிறிய செயற்கைக்கோள்களும் விண்ணில் ஏவப்படுகின்றன.
இவை அனைத்தும் தொழில்நுட்ப ஆய்வுகளுக்குப் பயன்படுத்தப்படும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.