சென்னை: திமுக இளைஞரணியின் புதிய நிர்வாகிகள் கூட்டம், சென்னை அண்ணா அறிவாலயத்தில் வரும் 29-ம் தேதி நடக்கிறது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றுகிறார்.
திமுகவில் இளைஞரணி, மாணவர் அணி உள்ளிட்ட 25 அணிகள் மற்றும் பல்வேறு குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த அணிகளுக்கு மாநில, மாவட்ட அளவில் அனைத்து நிலைகளிலும் நிர்வாகிகளை நியமிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
இதன்மூலம் 15 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு பதவிகள் கிடைக்கும் என்று அவர் தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில் அனைத்து அணிகள், குழுக்களிலும் நேர்காணல் மூலம் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். நிர்வாகிகள் பட்டியல்கள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன.
திமுக இளைஞரணி புதிய நிர்வாகிகள் பட்டியலை இளைஞரணி செயலாளரான அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அண்மையில் வெளியிட்டார். இந்நிலையில், இளைஞரணி மாவட்ட நிர்வாகிகள் கூட்டம், வரும் 29-ம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெறுகிறது. அன்று காலை 9 மணிக்கு கூட்டம் நடைபெறும் என்று உதயநிதி அறிவித்துள்ளார். இந்தக் கூட்டத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, புதிய நிர்வாகிகளை வாழ்த்திப் பேசுகிறார்.
கருணாநிதி நூற்றாண்டை கொண்டாடுவது, ஒன்றிய, நகர, பேரூர்களில் நிர்வாகிகள் நியமனம், உறுப்பினர் சேர்க்கை, பயிற்சி பாசறை உள்ளிட்டவை குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.