கோவை: சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோரை மதம் சார்ந்து பார்க்காமல் குற்றவாளிகளாக பார்க்க வேண்டும் என வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தேர்தல் வாக்குறுதிகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும், கனிமவள கொள்ளையை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாநகரின் 100 வார்டுகளிலும் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் பங்கேற்றார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: லஞ்சத்திலும், ஊழலிலும் அரசு நிர்வாகம் திளைத்து வருகிறது. கோவை தெற்கு தொகுதியில் யார் வந்து மக்களுக்கான பணியை செய்தாலும் வரவேற்கிறோம். யார், எங்கு போட்டியிடப்போகிறார்கள் என்பது தேர்தல் வரும் போதுதான் தெரியும். யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது மக்களுக்கு தெரியும்.
தேச விரோத செயல்கள், மனித குலத்துக்கு எதிரான செயல்களை செய்பவர்களை தயவு செய்து மதத்தின் பார்வை கொண்டு பார்க்க வேண்டாம். குற்றவாளிகளை, குற்றவாளிகளாக பார்க்க வேண்டும். கோவையில் சிலிண்டர் குண்டு வெடிப்பு நடைபெற்றது. உடனடியாக சிறுபான்மை மக்கள், இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்களுக்கு ஆதரவு தர மாட்டோம் என தீர்மானித்தார்கள்.
அது பாராட்டப்பட வேண்டிய விஷயம். எனவே, இது போன்று தீவிரவாத செயல்களில் ஈடுபடுவோரை அந்த சமூகத்தினர் முற்றிலுமாக ஒதுக்க வேண்டும். அப்போதுதான் சமுதாயத்தில் அமைதியான நிலை உருவாகும். இவ்வாறு அவர் கூறினார்.