ஆடி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால், காசிமேட்டில் மீன் வியாபாரம் களைகட்டியது. ஆடி மாதம் அம்மனை வழிபடும் பக்தர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் தங்கள்வீடுகளில் கூழ் வார்த்து, படையிலிட்டுவழிபடுவார்கள். படையலில் அசைவ உணவுகள் பிரதானமாக இடம் பெற்றிருக்கும்.
நேற்று, ஆடி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் பெரும்பாலானோர் தங்கள் வீடுகளில் கூழ் வார்த்து, படையிலிட்டு அம்மனை வழிபட்டனர். இதற்காக, காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் அதிகாலையில் இருந்தே பொதுமக்கள் மீன்களை வாங்க குவிந்தனர். மீன்களின் விலையும் அதிகரித்து காணப்பட்டது.
மீனவர்கள் மகிழ்ச்சி: எனினும், பொதுமக்கள் விலையைப் பற்றி கவலைப்படாமல் போட்டி போட்டுக் கொண்டு மீன்களை வாங்கினர். அதேபோல், சிறு வியாபாரிகளும் மீன்களை அதிக விலைக் கொடுத்து வாங்கிச் சென்று விற்பனை செய்தனர். இதனால், காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் வியாபாரம் களை கட்டியது.
மீனவர்களும் தாங்கள் கடலில் இருந்து பிடித்து வந்த மீன்கள் முழுவதும் ஒரு சில மணி நேரத்துக்குள் விற்பனையானதைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.