சென்னை: தமிழகத்தில் டெங்கு, சிக்குன் குனியா, மலேரியா, ஜப்பானிய மூளைக் காய்ச்சல் பாதிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கேரள மாநிலத்தில் பெய்து வரும் மழையால், கொசுக்கள் மூலம் பரவும் மலேரியா மற்றும் ஜப்பானிய மூளைக் காய்ச்சல் நோய்கள் தீவிரமாக பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன.
தமிழகத்தில் டெங்கு, மலேரியா போன்ற பாதிப்புகள் ஓரளவு இருந்தாலும், ஜப்பானிய மூளைக் காய்ச்சலின் தாக்கம் பெரிய அளவில் இல்லை. தமிழகத்தில் நடப்பாண்டில் 3,211 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அதேபோல, 45 பேர் சிக்குன்குனியாவாலும், 141 பேர் மலேரியாவாலும், 100-க்கும் மேற்பட்டோர் லெப்டோஸ்பிரோசிஸ் எனப்படும் எலிக் காய்ச்சலாலும், 1,000-க்கும்மேற்பட்டோர் ஸ்கரப் டைபஸ் எனப்படும் பாக்டீரியா தொற்று காய்ச்சலாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜப்பானிய மூளைக் காய்ச்சலுக்கு 11 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அதனால் உயிரிழப்பு ஏதும் இல்லை என்றும் பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக தமிழக பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் தமிழகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவும், டெங்கு, சிக்குன் குனியா, மலேரியா, ஜப்பானிய மூளைக் காய்ச்சல் உள்ளிட்ட காய்ச்சல் கண்டறியப்பட்டால் உடனடியாக தகவல் தெரிவிக்கவும், மாவட்டநிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுகாதார களப்பணியாளர்களிடம் கொசு ஒழிப்பு தடுப்புப் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
கொசுக்களால் பரவும் நோய்களுக்கு சிகிச்சை அளிக்க தேவையான மருந்துகள் போதிய அளவில் உள்ளன. ஜப்பானிய மூளைக் காய்ச்சலுக்கு ஏஇஎஸ் எனப்படும் மருத்துவக் கண்காணிப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
தீவிர காய்ச்சல், வலிப்பு மற்றும் நினைவாற்றல் இழப்புடன் வரும் குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் முதுகுத் தண்டுவடத்தில் இருந்து நீர் மாதிரியை சேகரித்து பரிசோதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதில் ஜப்பானிய மூளைக் காய்ச்சல் இருப்பது உறுதியானால் உரிய சிகிச்சைகளை உடனடியாக வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.