தமிழகம்

26 ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி தீவிரம்: இந்த ஆண்டு இறுதிக்குள் பணிகள் முடியும் என எதிர்பார்ப்பு

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை கடற்கரை-வேளச்சேரி பறக்கும் ரயில் வழித்தடம் மற்றும்சென்னை எழும்பூர் - விழுப்புரம்வழித்தடத்தில் 26 ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது.இந்த ஆண்டு இறுதிக்குள் பணிகள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை புறநகர் ரயில் நிலையங்களில் பயணிகள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் ஆர்.பி. எஃப் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பயணிகள், குறிப்பாக பெண் பயணிகள் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதற்காக, சென்னை புறநகர் ரயில் நிலையங்களில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

புறநகர் ரயில் வழித்தடங்களில் ஆர்பிஎஃப் படையினர் தொடர்ந்து ரோந்து சென்று, பயணிகளுக்கு பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.

ரயில் நிலையங்களில் குற்றசம்பவங்களை தடுக்கவும், குற்றவாளிகளை பிடிக்கவும் சிசிடிவி கேமரா பொருத்தும்பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல், எழும்பூர், மூர் மார்க்கெட் வளாகம், மாம்பலம், சென்னை கடற்கரை, தாம்பரம், பேசின்பாலம், திருவள்ளூர், நுங்கம்பாக்கம், பரங்கிமலை, பழவந்தாங்கல், செங்கல்பட்டு, திருமயிலை, அரக்கோணம், காட்பாடிஉள்ளிட்ட ரயில் நிலையங்களில்சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. சென்னை ரயில்வே கோட்டத்தில் முக்கிய புறநகர் ரயில்நிலையங்களில் 548 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

சென்னை கோட்டத்தில் புறநகர் மற்றும் புறநகர் அல்லாத நிலையங்களை உள்ளடக்கிய 74 ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவதற்கான ஒப்பந்தப்புள்ளி வழங்கப்பட்டுள்ளது.

சென்னை கடற்கரை - வேளச்சேரி பறக்கும் ரயில் வழித்தடம் மற்றும் சென்னை எழும்பூர் - விழுப்புரம் வழித்தடத்தில் 26நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி துரிதப்படுத்தப்பட்டு, இந்த ஆண்டு இறுதிக்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை-கூடூர் மார்க்கத்தில் 17 ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமரா பொருத்தும் பணி நடைபெறுகிறது. இப்பணிகளை அடுத்த ஆண்டு ஜூன் மாத்தில்முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை - ஜோலார்பேட்டை மற்றும் அரக்கோணம் - ரேணிகுண்டா மார்க்கங்களில் 31 நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப்பணி அடுத்த ஆண்டு செப்.30-க்குள் முடிக்கப்படும்.

SCROLL FOR NEXT