சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில்திட்டத்தில், மாதவரம் - சிறுசேரி சிப்காட் வரையிலான 3-வது வழித்தடத்தில் பசுமை வழிச்சாலை பகுதியில் மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி விறுவிறுப்படைந்துள்ளன. அடுத்த மாதஇறுதியில் அடையாறு ஆற்றைஅடையும் என்று மெட்ரோ ரயில்நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னையில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116.1 கி.மீ. தொலைவுக்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகின்றன. மாதவரம்-சிறுசேரி வரை (45.4 கி.மீ.)3-வது வழித்தடத்திலும், கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி வரை (26.1 கி.மீ.) 4-வது வழித்தடத்திலும், மாதவரம்-சோழிங்கநல்லூர் வரை (44.6 கி.மீ) 5-வது வழித்தடத்திலும் பணிகள் நடைபெறுகின்றன.
இவற்றில், ஒரு வழித்தடம் மாதவரம்- சிறுசேரி சிப்காட் வரையிலான 3-வது வழித்தடம். இந்த வழித்தடத்தில் 28 சுரங்கப்பாதை ரயில் மெட்ரோ ரயில் நிலையங்களும், 19 உயர்நிலைப் பாதை மெட்ரோ ரயில் நிலையங்களும் அமைக்கப்பட உள்ளன.
இந்த வழித்தடத்தில் பசுமை வழிச்சாலை பகுதியில் 1.2 கி.மீ. தொலைவுக்கான சுரங்கப்பாதை அமைக்கும் பணி கடந்த பிப்ரவரி 16-ம் தேதி தொடங்கியது. இதில் முதல் சுரங்கம் தோண்டும் இயந்திரமான ‘காவேரி’, டிபி சாலைக்கு கீழே சுரங்கப்பாதை அமைத்து, திருவிக பாலம் அருகே அடையாறு ஆற்றை கடந்து, அடையாறு சந்திப்பு நிலையத்துக்கு சென்றடைய உள்ளது.
முதல் சுரங்கம் தோண்டும் இயந்திரம்(டிபிஎம்) மூலமாக, இதுவரை 110 மீட்டர் வரை சுரங்கப்பாதை அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது. இங்கு பயன்படுத்தப்படும் 2-வது இயந்திம்(அடையாறு) மூலமாக, இதுவரை சுமார் 60 மீட்டர் வரை சுரங்கப்பாதை பாதை அமைக்கப்பட்டுள்ளது. பணிகள் ஒவ்வொரு கட்டமாக நடைபெறுகிறது.
இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: 3-வது வழித்தடத்தில் பசுமை வழிச்சாலையில் இருந்து அடையாறு சந்திப்பு வரை சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு இயந்திரங்கள் வரும் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் அடையாறு ஆற்றை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பணிகள் தற்போது இரவு பகலாக நடைபெற்று வருகின்றன. 200க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.