சென்னை: பழங்காலத்தில் உடல் உழைப்பு சார்ந்த பணிகள் இயற்கையான உடற்பயிற்சியாக அமைந்தது. தற்போது வேளாண்மையை மறந்து, நகர்ப்புற வாழ்க்கைக்கு மாறியது, பாரம்பரிய உணவுப் பழக்கங்களை மறந்தது, வீட்டு வேலை உள்ளிட்டவற்றில் இயந்திரங்களை புகுத்தியது போன்ற காரணங்களால் இளம்வயதிலேயே நீரிழிவு மற்றும் இதயநோயின் தாக்கம் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இதிலிருந்து தப்பிக்க உடற்பயிற்சி மிகவும் அவசியமாகிறது.
சென்னையில் மாநகராட்சி நிர்வாகம் விளையாட்டு திடல்களையும், உடற்பயிற்சி கூடங்களையும் அமைத்துள்ளது. 300 ஆண்டுகளுக்கும் மேல் வரலாறு கொண்ட சென்னை மாநகராட்சியில் சுதந்திரத்துக்கு முன்பே 18 விளையாட்டு திடல்கள் இருந்தன.
அதன்பிறகு 210 விளையாட்டு திடல்களாக பெருகியுள்ளன. இவற்றில் 14 திடல்கள் நட்சத்திர அந்தஸ்துபெற்ற விளையாட்டு திடல்களாகும். இதுதவிர மாநகராட்சி சார்பில் 96 உடற்பயிற்சி கூடங்களும் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் 22 உடற்பயிற்சிக் கூடங்கள் நவீன உடற்பயிற்சி உபகரணங்களை கொண்டவை என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஆனால் இந்த உடற்பயிற்சிக் கூடங்கள் அதிகாரிகளின் எவ்வித கண்காணிப்புக்கும் உள்ளாவதில்லை. கவுன்சிலர்களும் உடற்பயிற்சிக் கூடங்களை எட்டிக்கூட பார்ப்பதில்லை. இதனால்தான் என்னவோ, பணியாளர்கள் முறையாக பணிக்கும் வருவதில்லை. பலர் யாரிடமாவது சாவியை கொடுத்துவிட்டு சென்றுவிடுகின்றனர். சிலர் ஊதியம் வாங்கிக்கொண்டு ஆட்டோ ஓட்டுவது போன்ற சுய தொழில்களும் செய்து வருவதாக கூறப்படுகிறது.
வியர்வை சிந்தக் கூடிய இதுபோன்ற உடற்பயிற்சிக் கூடங்களில் தினமும் தரையை கிருமி நீக்கம் செய்ய வேண்டும். அப்படி எதுவும் செய்வதே இல்லை. ஐஏஎஸ் அதிகாரி நிலையில் உள்ள வட்டார துணை ஆணையர்களும், பூங்கா மற்றும் விளையாட்டு திடல் பிரிவு தலைமையக துணை ஆணையரும் இவற்றையெல்லாம் கவனிப்பதே இல்லை. இதனால் விதிமீறல்கள் தொடர்வதாக உடற்பயிற்சி கூடத்துக்கு வரும் பயனாளிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
உடற்பயிற்சி உபகரணங்கள் ஏதேனும் பழுதானால் பணியாளர்கள் முறையாக மேலதிகாரிகளுக்கு தெரிவிப்பதில்லை. அப்படியே தெரிவித்தாலும்மாநகராட்சி அதிகாரிகள் புகாரை நிவர்த்தி செய்வதில்லை.
சில உடற்பயிற்சிக் கூடங்களில் கழிவறைகளே இல்லை. இருக்கும் சில கழிவறைகளையும் தூய்மைப்படுத்துவது இல்லை. சில இடங்களில் கழிவறைஇருந்தும் தண்ணீர் வசதியின்றி மூடிக்கிடக்கின்றன. உடற்பயிற்சிக் கூடங்களில் வழக்கமான பணி நேரம்காலை 6 மணி முதல் 10 மணி வரையும் மாலையில் 4 மணி முதல் இரவு 8 மணி வரை என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகள் மற்றும் அரசு விடுமுறை நாட்களில் மட்டும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் பல உடற்பயிற்சிக் கூடங்கள் காலை 9 மணிக்குள் மூடப்பட்டு விடுகின்றன. மாலை நேரங்களில் திறக்கப்படுவதே இல்லை. சில உடற்பயிற்சிக் கூடங்களில் காலை 6 முதல் 9 மணிவரை மட்டுமே வேலை நேரம் என மாநகராட்சி தலைமை ஒப்புதலின்றி எழுதி வைத்துள்ளனர். மாலையில் ஏன் திறப்பதில்லை என்று கேட்டால், நாங்கள் விடுமுறை விடாமல் தினமும் உடற்பயிற்சி கூடத்தை திறக்கிறோம். அதனால் மாலையில் திறப்பதில்லை என இவர்களாகவே விளக்கமளிக்கின்றனர்.
இதனால் மாலை நேரங்களில் உடற்பயிற்சிக் கூடங்களை திறந்து அந்த நேரங்களில்மகளிரை அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் தற்போது வலுப்பெற்று வருகிறது. இதனால்மகளிருக்கென மாலை நேரத்தை ஒதுக்கி உடற்பயிற்சிகூடங்களை திறக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.
இதுதொடர்பாக கொடுங்கையூர் முத்தமிழ் நகர் பகுதியை சேர்ந்த மகளிர் கூறும்போது, "இங்குள்ள உடற்பயிற்சி கூடத்தில் மாலை நேரத்தில் பெண்களை மட்டும் அனுமதிக்க வேண்டும். இந்த உடற்பயிற்சி கூடத்தில் உள்ள 2 ட்ரெட் மில்களும் கடந்த 5 ஆண்டுகளாக பழுதாகி கிடக்கின்றன. அதை சீரமைக்க வேண்டும். அதனால் இந்த உடற்பயிற்சி கூடத்தை பெண்கள் பயன்படுத்த மாநகராட்சி வழிவகை செய்ய வேண்டும்" என்றனர்.
இதேபோல் எம்.ஆர்.நகர் பகுதியை சேர்ந்த மகளிர் கூறும்போது, "எங்கள் பகுதியில் உள்ள விளையாட்டு திடல் நட்சத்திர அந்தஸ்து கொண்டது. ஆனால்நடைபாதை கற்கள் பெயர்ந்து பல ஆண்டு ஆகிறது.அந்த விளையாட்டு திடல் திறந்தவெளி மதுக்கூடமாகவே மாறிவிட்டது. அங்கு மதுபாட்டில்கள், தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் குவளைகள், பிளாஸ்டிக் கழிவுகள் சிதறிக் கிடக்கின்றன.
அங்கு பெண்கள் நடைபயிற்சி மேற்கொள்ள பாதுகாப்பான சூழல் இல்லை. அதனால் நாங்கள் தெருக்களிலேயே, நாய்கள் தொல்லைக்கு நடுவே நடையிற்சி மேற்கொள்கிறோம். இந்த திடலில் உள்ள உடற்பயிற்சி கூடம் மாலை நேரத்தில் மூடிக்கிடக்கிறது. அந்தநேரத்தில் மகளிரை அனுமதிக்க வேண்டும். மகளிருக்கேற்ற ட்ரெட் மில் போன்றஉபகரணங்களை நிறுவி கூடத்தை மேம்படுத்த வேண்டும்" என்றனர்.
கிருஷ்ணமூர்த்தி நகர் பகுதியை சேர்ந்த மகளிர் சிலர் கூறும்போது, "தனியார் உடற்பயிற்சி கூடத்துக்கு செல்ல வேண்டுமென்றால், ஒரே தவணையாக ஆண்டுக்கு ரூ.8 ஆயிரம் வரை கட்டணம் செலுத்த சொல்கின்றனர். அவ்வளவு தொகையை செலவிட வசதி இல்லை.
எங்கள் பகுதியிலும் மாலை நேரத்தில் உடற்பயிற்சி கூடம் திறக்கப்படுவதில்லை. மாநகராட்சி மேயரும் பெண், கவுன்சிலர்களில் 50 சதவீதத்துக்கு மேல் பெண்கள் உள்ள நிலையில், இந்த உடற்பயிற்சி கூடத்தில் மாலை நேரத்தில் மகளிரை அனுமதிக்க வேண்டும். எங்களுக்கேற்ற பயிற்றுநரை நியமிக்க வேண்டும்" என்றனர்.
இது குறித்து மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணனிடம் கேட்டபோது, "தொடர்புடைய அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.