மதுரை: மதுரையில் இன்று (ஞாயிறு) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநில உரிமை பாதுகாப்பு மாநாடு மதுரை எம்பி சு.வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது. மாநகர் மாவட்டச் செயலாளர் மா.கணேசன் வரவேற்றார். இதில் அமைச்சர்கள் பி.மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் மற்றும் கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.
இம்மாநாட்டில், அகில இந்திய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி சிறப்புரையில் பேசியதாவது. இந்திய நாட்டின் கூட்டாட்சி தத்துவத்தை காக்கும் மாநாட்டில் கூடியிருக்கிறோம். வேற்றுமையில் ஒற்றுமை, அனைவருக்கும் சமமான அந்தஸ்து, சமமான உரிமையை நிலைநாட்டுவதுதான் கூட்டாட்சி தத்துவம். ஆனால் இரட்டை எஞ்சின் வேகத்தில் செல்வதாகக் கூறும் பாஜக கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக செயல்படுகிறது.
மணிப்பூரில் இந்துக்களையும், கிறிஸ்தவர்களையும் பிளவுபடுத்தி போராடத் தூண்டியுள்ளனர். இதனால் மணிப்பூர் வன்முறையால் எரிந்து கொண்டிருக்கிறது. அரசியலைப்பு சட்டத்தில் குறிப்பிட்டுள்ள இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம். அந்த வரையறைதான் கூட்டாட்சியின் அடிநாதம். அதனை மீறும் வகையில் பாஜக அரசு செயல்படுகிறது. இந்தியா அனைத்து இனங்கள், மொழிகள், கலாச்சாரங்களை உள்ளடக்கியது. ஆனால் மோடி அரசாங்கம் பெரும்பான்மையாக உள்ள இந்துக்களுக்கு மற்றவர்கள் அடங்கிச் செல்ல வேண்டும் என நினைக்கிறது.
பாஜக ஆட்சியில் கூட்டாட்சி தத்துவம் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளது. ஒற்றை பாசிச அரசாங்கமாக உள்ளது.
மாநிலங்களில் ஆளுநர்கள், துணை நிலை ஆளுநர்கள் மூலம் பாஜக தனது திட்டத்தை செயல்படுத்துகின்றனர். பொதுப்பட்டியலில் உள்ள கல்வி, விவசாயம், கூட்டுறவு உள்ளிட்டவற்றை மாநிலங்களை ஆலோசிக்காமல் தனது அதிகாரத்திற்கு கொண்டு வந்துள்ளது. ஒட்டுமொத்த வருவாயில் 42 சதவீதம் கொடுக்க வேண்டும் என கூறியும், 34 சதவீதம் மட்டுமே நிதி ஒதுக்கியுள்ளது. இது பாஜகவின் நிதி அதிகார மீறல் என்றுதான் சொல்ல வேண்டும். மேலும் இந்தி திணிப்பு வேலையை செய்கிறது. இது அரசியல் சட்டத்திற்கு விரோதமானது. பட்டியலில் 22 மொழிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
அனைத்து மொழிகளுக்கும் சம அந்தஸ்து கொடுக்கப்பட வேண்டும். மொழியை திணிப்பதன் மூலம் கலாச்சாரத்தை அழிக்கின்றனர். இந்தியை திணிப்பதன் மூலம் இந்துத்துவா கலாச்சரத்தை திணிக்க முயற்சிக்கின்றனர். மதச்சார்பற்ற இந்தியா என்பதை மாற்ற நினைக்கின்றனர். எனவே இந்தியாவை, இந்திய ஒன்றியத்தை பாதுகாப்பதற்கான போராட்டத்தை தொடர்ச்சியாக நடத்திக்கொண்டிருக்கிறோம்.
இந்தியா பாதுகாக்கப்பட வேண்டும். இது இந்தியாவின் வெற்றி, மக்களின் வெற்றியாகும். இந்தியா வெற்றியை உறுதி செய்யும் கூட்டமாக இக்கூட்டம் அமைந்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.