நெல்லை: தஞ்சாவூர், திருச்சி, விழுப்புரம், நெல்லை உள்பட தமிழகத்தில் 9 மாவட்டங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
9 மாவட்டங்களில் 15க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். நெல்லையில் உள்ள எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
கோவை கோட்டைமேடு பகுதி, மதுரை, உசிலம்பட்டி, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடைபெறுகிறது.
திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக சோதனை நடைபெற்று வருவதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு: தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே திருபுவனம் மேலதூண்டில் விநாயகம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பாமக முன்னாள் நகரச் செயலாளர் ராமலிங்கம். இவர், அந்தப் பகுதியில் சிலர் மதமாற்றத்தில் ஈடுபட்டதை கண்டித்தார். இந்நிலையில் ராமலிங்கம், கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5-ம் தேதி தனது கடையில் இருந்து வீட்டுக்கு செல்லும்போது கொலை செய்யப்பட்டார்.
இதுகுறித்து திருவிடைமருதூர் போலீஸார் வழக்குப் பதிந்து, குறிச்சிமலை பகுதியைச் சேர்ந்த முகமது ரியாஸ், திருபுவனத்தைச் சேர்ந்த எஸ். நிஸாம் அலி, சர்புதீன், முகமது ரிஸ்வான், திருவிடைமருதூரைச் சேர்ந்த அசாருதீன் உட்பட பலரை கைது செய்தனர். முன்னதாக இந்த வழக்கு தொடர்பாக 18 பேர் மீது வழக்கு பதியப்பட்டது. பின்னர் இந்த வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) பிரிவுக்கு மாற்றப்பட்டது.